இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் புஷ்பா 2. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார். இன்னும் சில தினங்களில் இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில், புஷ்பா 2 படத்தில் பணியாற்றியது பற்றி இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் படக்குழுவை சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இது குறித்த பதிவில், “புஷ்பா 2 படம் எனக்கு மிகப்பெரிய பயணம். பி.ஜி.எம். பணிகளை மேற்கொள்ள செய்து அற்புதமான அனுபவத்தை வழங்கியதற்கு நன்றி மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
தயாரிப்பாளர்கள் ரவிசங்கர், நவீன் யெர்னெனி மற்றும் செர்ரி ஆகியோரது தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நம்பிக்கை இன்றி இது சாத்தியமாகி இருக்காது.” “அல்லு அர்ஜூன் நீங்கள் அன்பாக இருந்தீர்கள். உங்களுக்கு பி.ஜி.எம். ஸ்கோர் செய்தது எனக்கு கூடுதல் ஆர்வத்தை கொடுத்தது. உண்மையில் ஃபயராக இருந்தது. இத்தகைய பிரமாண்ட திரைப்படத்தில் உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் இயக்குநர் சுகுமார் சார். அதுவும் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகளில் பணியாற்றியது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது.” படத்தொகுப்பாளர் நவீன் நூலி சகோதரர், இந்த பணி முழுக்க தொடர்ந்து ஆதரவாக இருந்ததற்கு நன்றி. எனது குழுவினர் அனைவருக்கும் நன்றி. டிசம்பர் 5 ஆம் தேதி புஷ்பா 2 காட்டுத்தீ உலகம் முழுக்க பரவ இருக்கிறது. அதனை உங்கள் அருகாமையில் உள்ள தியேட்டர்களில் பாருங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.