கன்னட சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் ‘காந்தாரா’ என்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘காந்தாரா 2’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இதனிடையே இவர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ‘அனுமான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து ரிஷப் ஷெட்டி சந்தீப் சிங் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு “சத்ரபதி சிவாஜி மகாராஜ்” என தலைப்பிடப்பட்டுள்ளது. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பதாகை வெளியாகி உள்ளது. இந்த பதாகையை ரிஷப் ஷெட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் “இது வெறும் படமல்ல. அனைத்து முரண்களுக்கும் எதிராக போராடிய ஒரு போர் வீரரின் முழக்கம். வலிமை மிக்க முகலாய பேரரசின் வலிமைக்கு சவால் விடுத்தவர். ஒருபோதும் மறக்க முடியாத பாரம்பரியத்தை உருவாக்கியவர் சத்ரபதி சிவாஜி மகாராஜ்” எனப் பதிவிட்டுள்ளார். இப்படம் வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது