திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார். உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்து இருந்தார். தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சூர்ய மூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கிடைக்கப் பெற்றதாக கூறினார். இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்புக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை எனவும் தங்களது தரப்பையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, சூர்ய மூர்த்தியின் மனு குறித்து 4 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.