பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் உடல்நலக்குறைவால் காலமானார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நேத்ரன். இவர் பல தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். சின்னத்திரையை பொருத்தமட்டில் அவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த நடிகராக பயணித்து வந்தார். இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் வளசரவாக்கம் பகுதியில் வசித்து வந்தார். இவர் தன்னோடு சீரியலில் நடித்த தீபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நேத்ரன் தனது மகள் அபிநயாவுடன் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இந்த சூழலில், சில மாதங்களுக்கு முன்பு நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செய்தியை அவரது மகள் அபிநயா காணொலி வாயிலாக தெரிவித்திருந்தார். அதற்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அபிநயா தன்னுடைய தந்தை அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார் என்று தன்னம்பிக்கையோடு பேசி இருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நேத்ரன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு செய்தி சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரோடு நடித்த நடிகர்கள் பலரும் அவர் பற்றி உருக்கமாக பதிவு வெளியிட்டு வருகிறார்கள்.