தென் கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல் நேற்று அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தேசத்தை பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், “நமது நாடாளுமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாகவும், சர்வாதிகாரத்தின் வசிப்பிடமாகவும் மாறியுள்ளது. அவர்கள் நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகளை முடக்கி, நமது ஆட்சியை கவிழ்க்க முயல்கின்றனர்” என்று யூன் சுக் இயோல் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக ராணுவ தலைவர், முக்கிய தளபதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்பு, நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்து தடுப்பான்களை அமைத்தனர்.
இதனிடையே அதிபரின் இந்த முடிவிற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் அவசரநிலையை நீக்குவதற்கான வாக்கெடுப்பை நடத்தினர். இதனை தொடர்ந்து அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே (இந்திய நேரப்படி அதிகாலை 1.15 மணி) உரையாற்றினார். அப்போது அவர், அவசரநிலை நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களை நாங்கள் வாபஸ் பெற்றுள்ளோம். நாடாளுமன்றத்தின் கோரிக்கையை நாங்கள் ஏற்று, மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என கூறினார். இந்த நிலையில், தென் கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தென் கொரியாவின் அதிபரை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் 3-ல் இரண்டு பங்கு ஆதரவும், குறைந்தபட்சம் 6 அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவும் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.