நடிகர் ஜெயராம் -நடிகை பார்வதி ஆகியோரது மகனான காளிதாஸ் ஜெயராம் மீன் குழம்பும் மண்பானையும், ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ராயன் படத்தில் தனுசுக்கு தம்பியாக நடித்திருந்தார். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான பாவ கதைகள் தொடரில் காளிதாஸ் நடித்த திருநங்கை கதாபாத்திரம் அதிக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகி தாரிணி காளிங்கராயனை காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதைத்தொடர்ந்து இவர்களது திருமணம் குருவாயூர் கோவிலில் காலை நடந்தது. காளிதாஸ் ஜெயராம் சிவப்பு நிற வேஷ்டி, தங்க ஜரிகையுடன் கூடிய துண்டு அணிந்திருக்க, மணமகள் தாரிணி தங்கநிற எம்பிராயிடு செய்யப்பட்ட சிவப்பு நிற சேலை மற்றும் துளசி மாலைஅணிந்து இருந்தார். மந்திரங்கள் முழங்க இருவருக்கும் கோவிலில் திருமணம் நடந்தது. திருமண விழாவில் மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி, கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் மற்றும் குடும்பத்தினர் நண்பர்கள் கலந்து கொண்டனர்.