எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை விரைவில் உருவாக்குவோம் என ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசியிருந்தார். இது கூட்டணி கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் எனவும், ஆயிரம் கைகள் மறைத்தாலும்… ஆதவ(ன்) மறைவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் காணொலியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.