வடக்கில் மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்த தமிழ் பிரஜை ஒருவரிடம் பொலிஸார் விசாரணை
தமிழ் தேசிய மலராகக் கருதப்படும் கார்த்திகைப் பூ நினைவேந்தலில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பாக்கு மரக்கன்றுகள் தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் ஏற்பாட்டாளரை யாழ்ப்பாணப் பொலிஸார் வரவழைத்து டிசம்பர் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுமார் 45 நிமிடங்கள் வாக்குமூலம் பதிவு செய்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவீரர் தின நிகழ்வை ஏற்பாடு செய்ய நிதியுதவி வழங்கியது யார், நிகழ்வு ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியது யார் போன்ற கேள்விகளை பொலிஸார் தன்னிடம் கேள்வி எழுப்பியதாக தனது நண்பருடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமுதன் தெரிவித்தார்.
“யார் இதனை செய்தது? எவ்வாறு ஒழுங்குப்படுத்தினீர்கள்? யார் நிதி உதவி செய்தது? என்று கேட்டார்கள். கார்த்திகை பூ உள்ளிட்ட படங்களை எங்கிருந்து பெற்றீர்கள் எனக் கேட்டார்கள்? நாங்கள் அதனை இன்டர்நெட்டில் எடுத்ததாக சொன்னேன். உங்களுடன் வேறு யார் இணைந்து செயற்பட்டது எனக் கேட்டார்கள். என்னுடைய நண்பர் ஒருவர்தான் உதிவினார் எனச் சொன்னேன்.”
அவரது நண்பரிடம் பொலிஸார் வாக்குமூலங்கள் எதனையும் பதிவு செய்யவில்லை என பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
மாவீரர் தின கொண்டாட்டத்திற்காக கொடிகளை தைத்துக் கொடுத்தவர் மற்றும் அன்றைய தினம் பாக்கு மரக்கன்றுகளை விநியோகித்தவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அமுதன் மேலும் தெரிவிக்கின்றார்.
“டெயிலர் கடையொன்றில் கொடிகளை கைத்து எடுத்தோம் அவரிடமும் சென்று விசாரணை செய்துள்ளனர். இனி இவ்வாறான வேலைகளை எமக்கு செய்துகொடுக்கக்கூடாது என்ற தொனியில் அவரை பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களின் நினைவாக பாக்கு கன்றுகளை தந்துதவியவரையும் பொலிஸார் சென்று விசாரித்துள்ளனர்.”
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தின நிகழ்வு தொடர்பில் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கிய அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, பயங்கரவாத மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பினை கொண்டாடவோ, அவர்களது சின்னங்கள், கொடிகள் அல்லது பதாகைகளை காட்சிப்படுத்தவோ எவ்வித உரிமையும் இல்லையெனக் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூரும் தமிழ் மக்களுக்கான உரிமையை தாம் மதிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரையான வாரத்தில் வடக்கு கிழக்கில் 244 இடங்களில் தமிழ் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதுத் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 10 இடங்களில் புலிகளின் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை குறித்த சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டதற்காக கடந்த நவம்பர் 30ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம், இணுவில் மேற்கு, சுன்னாக்கம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மனோகரன் கயந்தரூபன், நேற்றைய தினம் (நவம்பர் 01) யாழ்ப்பாணம் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை டிசம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அன்றைய தினம் (டிசம்பர் 4) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா மனோகரன் கஜந்தரூபனை இரண்டு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவித்ததுடன் வெளிநாட்டுப் பயணத்திற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.