தென்மாவட்டங்களில் மிகப்பெரிய அளவுக்கு மழை பெய்ந்துள்ளது. பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை’ என முதலமைச்சர் ஸ்டாலின் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
தமிழகத்தில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரியில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மழை பாதிப்புகளை அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
அணை திறப்பு உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் இடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலர் அமுதா, வருவாய் நிர்வாக கமிஷனர் ராஜேஷ் லக்கானி உடன் இருந்தனர். மழை பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்து இருக்கிறது. மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெரிய அளவில் பாதிப்பு இருப்பதாக, இதுவரை செய்தி ஏதும் இல்லை. எது வந்தாலும் அதை சமாளிக்க, நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் ஆய்வு செய்ய செல்கிறார். புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லை. அணை நீர் திறப்பு குறித்து முன் கூட்டியே மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.