கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான முறையில் ரொறன்ரோ பெரும்பாகத்தில் பெருமளவில் நடைபெறும் ‘நகைக் கடைகள் கொள்ளைகள்’ எமது மக்கள் மற்றும் ஏனைய வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை மத்தியில் சஞ்சலத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளன என்பது தெளிவாகத் தெரிந்த ஒரு விடயமாகும்
எனவே இந்த ‘நகைக் கடைகள் கொள்ளைகள்’ தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள கருத்துக்கள் மற்றும் அச்ச உணர்வு பற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய – மாகாண மற்றும் மாநாகராட்சி அரசுகளின் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளடங்கிய பலரை அழைத்து இது தொடர்பான பயனுள்ள கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்த கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் மக்களின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது.
டிசம்பர் மாதம் 6ம் திகதி வெள்ளிக்கிழமையன்று மார்க்கம் நகரில் அமைந்துள்ள கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த பயனுள்ள கலந்துரையாடலுக்கு சம்மேளனத்தின் தலைவரும் கணக்காளருமான அரி அரிகரன் அவர்கள் தலைமை வகித்தார்.
மேற்படி கருத்தரங்கில் பாதிக்கப்பட்ட நகைக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள். பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஒன்றாரியோ மாகாண அரசின் சார்பில் துணை அமைச்சரும் மாகாண அரசின் உறுப்பினருமான விஜேய் தணிகாசலம் மற்றும் பல அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அத்துடன் யோர்க் பிராந்தியம் மற்றும் ரொறன்ரோ பெரும்பாகம் போன்ற பிரிவுசுளில் பணியாற்றும் தமிழ் பேசும் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு த ங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மாகாண அரசின் சார்பில் கலந்து கொண்ட துணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் அங்கு உரையாற்றுகையில் தற்போது ஒன்றாரியோ மாகாணத்தில் மிகுந்த தீவிரமாக நடைபெற்றுவரும் வாகனத் திருட்டு மற்றும் நகைக் கடைகள் மீது தாக்குதல்களை நடத்தி கொள்ளையடிப்பது போன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தங்கள் அரசாங்கம் மில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் ரோந்துப் பணிகளுக்காக ஹெலிகெப்டர்களைக் கூட கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால் அங்கு சமூகமளித்தவர்களில் பலர் காவல்துறையின் வேகம் இவ்வாறான குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இல்லாதது மக்கள் மத்தியில் மிகுந்த விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக ஒன்று பட்டுத் தெரிவித்தனர்.
அவ்வாறான கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளும் தங்கள் பக்கத்தில் உள்ள நியாயங்களையும் நீதித்துறையில் சில பின்னடைவுகளையும் மறைமுகமாகத் தெரிவித்தனர்.
அன்றைய கருத்தரங்கில் பயனுள்ள தீர்வுகள் எட்டப்படாவிட்டாலும் இந்த முயற்சியை மேற்கொண்ட கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்திற்கு அனைத்து தரப்பினரும் நன்றியைத் தெரிவித்தனர்.