தென்காசியில் 4வது நாளாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கன மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் அருவியின் அருகாமையில் செல்லாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், இன்று தண்ணீரின் வேகம் அதிகரித்து காணப்பட்டு வரும் சூழலில் 4வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.