வங்காளதேச விடுதலை போர் வெற்றி தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றிய பிறகு அடுத்த பொதுத் தேர்தலை 2025-ன் இறுதி அல்லது 2026-ன் முதல் பாதிக்குள் நடத்த முடியும். அனைத்து முக்கிய சீர்திருத்தங்களையும் முடித்துவிட்டு அதன் பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என அனைவரையும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். தற்போது தேர்தல் சீர்திருத்த ஆணையம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளை பொருத்தே தேர்தலுக்கான காலக்கெடு அமையும். எனினும், அரசியல் கருத்தொற்றுமை காரணமாக, சிறிய அளவிலான சீர்திருத்தங்களுடன் குறைபாடற்ற வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றால், 2025ம் ஆண்டின் இறுதியில் தேர்தலை நடத்துவது சாத்தியமாகும். அதேநேரத்தில், எதிர்பார்க்கும் அளவுக்கு தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு தேர்தல் நடத்தப்படலாம் என்றால் அதற்கு கூடுதலாக 6 மாதங்கள் ஆகலாம். இவ்வாறு அவர் பேசினார்.