ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் ஆடி பூர கொட்டகையில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் நிறுவனம் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துக்கொண்டார். இளையராஜா அங்குள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் இளையராஜாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது ஜீயர்கள் கோயில் கருவறை முன்புள்ள அர்த்த மண்டபத்திற்குள் சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார்.
இதைக் கண்ட ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர். அதன் பிறகு மண்டபத்திற்கு வெளியே சென்ற இளையராஜா, அங்கிருந்தபடியே வழிபாடு செய்தார். தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ வடபத்ர சயனர் கோயிலில் தரிசனம் செய்த இளையராஜா, நாட்டிய நிகழ்ச்சி முழுவதிலும் கலந்து கொண்டார். இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஸ்ரீவில்லுபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்திற்குள் இளையராஜா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.