ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியை காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவ.27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், டிசம்பர் 14ம்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கபட்டது. இதன்பின்னர் மணப்பாக்கம் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட , ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முகலிவாக்கம் மின் மயானத்தில் வைக்கப்பட்டு மூன்று முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 48 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடத்தப்பட்ட பின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தொகுதியான ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.