அறிமுக இயக்குனர் நிதின் வேமுபதி வைத்து நாயை மையமாக வைத்து தமிழில் புதிய படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ‘கூரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. எஸ்.ஏ. சந்திரசேகர், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வகையில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற காவல்துறை நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ‘கூரன்’ திரைப்பட பதாகையை வெளியிட்டு படக்குழுவை பாராட்டியிருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் முதல்காட்சி பதாகை வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளியீடுதேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.