”அம்பேத்கர் குறித்த பேச்சுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் ” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி கடந்த இரு தினங்களாக இரு அவைகளையும் எதிர்க்கட்சியினர் முற்றுகையிட்டு வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் போராட்டம் நடந்தது. இவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இரண்டு எம்.பி.,க்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்து உள்ளார். இந்நிலையில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அம்பேத்கருக்கு எதிரான அமித்ஷாவின் கருத்தை நாட்டு மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். மறக்க மாட்டார்கள். இதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.