”பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றி, அதிக ”கலாநிதி”களைக்கொண்ட அரசு என நெஞ்சு நிமிர்த்தி நின்ற அநுர அரசு இன்று போலி ”கலாநிதி”பட்ட சர்ச்சைகளினால் சபாநாயகர் பதவி விலகியுள்ளதுடன் ஏனைய பலரும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளதால் தலைகுனிந்துள்ளது நிலையில் அநுர அரசின் ஊதிப் பெரிப்பிக்கப்பட்ட விம்பம் சிறிது சிறிதாக விலகத் தொடங்கியுள்ளது”
கே.பாலா
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் நேரடி வாக்குகள் மூலம் 141 ஆசனங்கள் தேசியப்பட்டியல் மூலம் 18 ஆசனங்கள் என 159 ஆசனங்களை ப்பெற்று வரலாற்ற வெற்றியை பதிவு செய்ததுடன் அதிக ” கலாநிதி ”களைக் கொண்ட அரசு எனவும் வர்ணிக்கப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அந்த ”கலாநிதி’’களே வினைகளாகவும் வில்லங்கங்களாகவும் மாறியுள்ள நிலையில் ”கலாநிதி”சர்ச்சையில் சிக்கி சபாநாயகரான அசோகா சபுமல் ரன்வல தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளமை அநுரவின் ”ஒழுக்க சீலர்’களைக்கொண்ட அரசுக்கு பெரும் பின்னடைவாகவே அமைந்துள்ளது.
கடந்த நவம்பர் 14 ஆம் திகதி இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் இடம்பெற்றது. இதில் 159 ஆசனங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசமைத்தது. இந்நிலையில் 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு கடந்த நவம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்றதுடன் அன்றைய தினமே புதிய சபாநாயகர்,பிரதி சபாநாயகர் ,பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவர் ,சபை முதல்வர், அரசதரப்பு மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொறடாக்கள் தெரிவு ,ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரை என்பனவும் இடம்பெற்றன.
யார் இந்த அசோக சபுமல் ரன்வல ?
இந்தக்கன்னி அமர்வில் 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு109,332வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற அசோக்க சபுமல் ரன்வலவின் பெயரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்மொழிந்தார். இதனை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார்.சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் பிறிதொருவரின் பெயர் முன்மொழியப்படாத நிலையில் பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக்க சபுமல் ரன்வல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
அசோக சபுமல் ரன்வல பாராளுமன்ற அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் ஜே.வி.பி.யில் அவர் ஒரு ஆரம்பகால உறுப்பினர் .தனது தொடக்கக் கல்வியை யட்டியான தொடக்கப் பாடசாலையிலும், ஹெனிகம மத்திய கல்லூரியிலும் கற்றார்.1980களில் ஜே.வி.பி.யுடன் இணைந்து கொண்ட அவர், பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் சபுகஸ்கந்த எரிபொருள் சுத் திகரிப்பு நிலைய ஊழியராகப் பணியாற்றியிருந்தார்.1987-89 ஜே.வி.பி ஆயுதக் கிளர்ச்சியை அடுத்து, 1989 ஆம் ஆண்டு அவர் ஜப்பானுக்கு தப்பி சென்றிருந்தார்.1994 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டார நாயக்க குமாரணதுங்க ஆட்சிக்கு வந்த பின்னர், ஏனைய ஜே.வி.பி. தலைவர்களுடன் அவரும் நாடு திரும்பினார்.அதன் பிறகு பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் பொது ஊழியர் தொழிற்சங் கத்தின் ஜே.வி.பி தொழிற்சங்க பிரதிநிதியாக ,தலைவராக செயற்பட்டு வந்தார்.பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர்தலைமையிலான தொழிற்சங்கம் ஆட்சிலிருந்த அரசாங்கங்களுக்கு கடு மையான நெருக்கடிகளைக் கொடுத்தது.
இந்நிலையில் பியகம உள்ளூராட்சி சபை உறுப்பினராக 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையும், மேல் மாகாண சபையின் உறுப்பினராக 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், இரண்டு முறையும் தெரிவு செய்யப்பட்டு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளிளிலும் அசோக சபுமல் ரன்வல அங்கம் வகித்திருந்தார். மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்தபோது, சபுகஸ்கந்தை பொலிஸ் குற்றப் பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 2018 ஜனவரியில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார் .கடந்த ஆட்சிக்காலத்தில் அசோகா ரன்வல தலைவராக இருந்த பெற்றோலியகூட்டுத்தாபன பொதுத் தொழிலாளர் தொழிற்சங்கம் அரசுக்கு கடும் நெருக்கடிகளைக்கொடுத்த நிலையில் அப்போது மின்சக்தி ,எரிசக்தி அமைச்சராகவிருந்த காஞ்சன விஜேசேகர வினால் பதிவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையிலேயே கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தேசியமக்கள் சக்தியின் வேட்பாளராக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் பாராளுமன்றத்தின் சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார்.
ஏன் சர்ச்சையில் சிக்கினார்?
பெற்றோலிய தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தபோதும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டபோதும் தனது பெயருக்கு முன்பாக ”கலாநிதி”என்ற பட்டப்பெயரை அசோகா சபுமல் ரன்வல பயன்படுத்தி வந்தார். தேர்தல் வேட்பாளர் விபரங்களிலும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பையும் ஜப்பானின் நூற்றாண்டு பழைமைவாய்ந்த வசீடா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டபடிப்பையும் முடித்திருந்ததாக அசோகா ரன்வல குறிப்பிட்டிருந்தார்.அத்துடன் சபாநாயகராக பதவியேற்றத்துடன் பாராளுமன்ற உத்தியோங்க் பூர்வ இனையதளத்திலும் அவரின் பெயருக்கு முன்பாக ”கலாநிதி”என்ற பட்டபெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
அசோக சபுமல் ரன்வல சபாநாயகராக பதவியேற்ற நவம்பர் 21 ஆம் திகதியன்றே சர்ச்சையில் சிக்கினார்.சபாநாயகருக்குரிய தலை அங்கியை தவறான முறையில் அணிந்து ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் கேலி ,கிண்டலுக்கு ஆளானதுடன் தலை அங்கியையே அணியத் தெரியாத சபாநாயகர் என விமர்சிக்கப்பட்டார். அத்துடன் அவர் தலை அங்கியை தவறாக அணிந்தபோது பாராளுமன்ற செயலாளரோ பிரதி,உதவி செயலாளர்களோ அல்லது தேசிய மக்கள் சக்தியினரோ அதனை ஏன் ஒழுங்குபடுத்த முயற்சிக்கவில்லை என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன.
இவ்வாறான நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது உத்தியோகபூர்வ முகப்பு புத்தகத்தில் ‘ சபாநாயகர் அவரது கலாநிதி பட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்’ என்று பதிவேற்றம் செய்து சபாநாயகரின் ”கலாநிதி”பட்டம் தொடர்பான கலகத்தை தொடக்கி வைத்தார். மஹிந்த தேசப்பிரியவின் சகோதரர்தான் சுனந்த தேசப்பிரிய .1971 ஜே .வி.பி.கிளர்ச்சியின் போது அதன் அரசியல் குழு உறுப்பினராக இருந்தவர்.அதனால் மஹிந்த தேசப்பிரிய ஜே .வி.பி.யின் அடிமுதல் நுனி வரை நன்கு அறிந்தவர் என்பதனால் அவரின் கருத்து வலுப்பெற்றதுடன் சபாநாயகர் மீதான கடும் விமர்சனங்களும் அதிகரித்தன.
22 நாள் சபாநாயகர்
ஆனால் மஹிந்த தேசப்பிரியவின் கருத்துக்கு தான் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை என அசோக சபுமல் ரன்வல முதலில் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் பாராளுமன்ற இணையத் தளத்திலிருந்து ”கலாநிதி”ப் பட்டம் நீக்கப்பட்டதையடுத்து அமைச்சரவை பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ ”கலாநிதி”சர்ச்சை தொடர்பில் சபாநாயகர் விளக்கமளிப்பார் என்று கூறினார்.ஆனால் சபாநாயகரோ அவர் பிரதிநித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியோ எந்தவிளக்கத்தையும் வழங்காத நிலையில் தேசியமாக்கல் சக்தியின் ஏனைய அமைச்சர்கள்,எம்.பி.க்களின் பட்டங்கள் தொடர்பிலும் சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன.
அதுமட்டுமன்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி, பேராசிரியர், கலாநிதிப் பட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய ஜனநாயக முன்னணியும் தீர்மானிததுடன் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஜீவன் தொண்டமான் இது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைப்பார் எனவும் அறிவித்தன.
அத்துடன் தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்ததுடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.சி.அலவத்துவல, அஜித் பீ பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா, சதுர கலப்பதி, ஜகத் விதான மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இவ்வாறு நிலைமை கை மீறிப்போவதை உணர்ந்து கொண்ட தேசிய மக்கள் சக்தி சபாநாயகரை பதவி விலகுமாறு கூறியது தமது அரசாங்கத்தில் எவர் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்த நிலையிலேயே சபாநாயகர் அசோக்க ரன்வல கடந்த 6 ஆம் திகதி விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,எனது கல்வி தகைமை குறித்து சமூகத்தின் மத்தியில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கல்வி தகைமை குறித்து எவ்விதமான பொய்யான தகவல்களையும் நான் வழங்கவில்லை.கல்வி தகைமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒருசில ஆவணங்கள் தற்சமயம் என்னிடம் இல்லை.அந்த ஆவணங்களை உரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதும் அவற்றை விரைவாக பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளது.எனக்கு கலாநிதி பட்டத்தை வழங்கிய ஜப்பானின் வஷிடா பல்கலைக்கழகத்துக்கு இணையான ஆராய்ச்சி நிறுவனம் கலாநிதி பட்டத்துக்குரிய ஆவணங்களை வெகுவிரைவில் வழங்குவதாக குறிப்பிட்டுள்ள நிலையில் அவற்றை வெகுவிரைவில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளேன்.எவ்வாறாயினும் தற்போதுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கத்தையும், எம்மீது நம்பிக்கை கொண்ட மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை தவிர்க்கும் வகையில் சபாநாயகர் பதவியை இராஜிநாமா செய்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் சபாநாயகராக 22 நாட்கள் மட்டுமே பதவிவகித்த அசோக சபுமல் ரன்வலவின் இராஜிநாமா அநுர அரசின் ஆட்சிக்கு ஏற்பட்ட கரும்புள்ளியாகவே உள்ளநிலையில் ஏனைய அரசுகளின் ஆட்சியில் சபாநாயகர் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் இராஜிநாமா செய்திருப்பாரா?நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவாருங்கள் தோற்கடித்துக் காட்டுகின்றோம் என சவால் விடுத்திருப்பார்கள்.ஆனால் அநுரஆட்சியில் இவ்வாறான தவறுகளுக்கு இடமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என வாதிடுவோரும் உள்ளனர்.
இலங்கை வரலாற்றில்
முதல் தடவையா?
இதேவேளை இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல்தடவையாக சபாநாயகர் ஒருவர் இராஜிநாமா செய்துள்ளதாக தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றன .இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதலாவது பாராளுமன்றகாலப்பகுதியான 1978 – 1988 இல் சபாநாயகராக 7 செப்டெம்பர் 1978 இல் பதவியேற்ற கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் 6 நாட்கள் மட்டுமே சபாநாயகராக பதவிவகித்த நிலையில் 13 செப்டெம்பர் 1978 இல் அப்பதவியிலிருந்து இராஜிநாமா செய்தார். இதனையடுத்து எம். ஏ. பாக்கீர் மாக்கர் 21 செப்டெம்பர் 1978இல் சபாநாயகராக பதவியேற்று 30 ஆகஸ்ட் 1983 வரை பதவிவகித்தநிலையில் அப்பதவியிலிருந்து இராஜிநாமா செய்தார். இதனால் அடுத்த சபாநாயகராக ஈ. எல். சேனநாயக்க 6 செப்டெம்பர் 1983 இல் சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார்.ஆக இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இராஜிநாமா செய்த சபாநாயகர் வரிசையில் அசோக சபுமல் ரன்வல 3 ஆவது சபாநாயகராகவும் மிகக்குறைந்த நாட்கள் சபாநாயகராக இருந்த வரலாற்றில் 2 ஆவது இடத்திலும் உள்ளார்.