ந.லோகதயாளன்.
பல கோடி செலவு செய்த நெடுந்தாரகை நங்கூரம் இன்றிச் செயல்பட முடியாது நிறுத்தி வைத்திருக்கும் அவலம் காணப்படுவதாக நெடுந்தீவு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள கடல் கடந்த தீவுகளிற்கான போக்கு வரத்திற்காக அரசின் 4 படகுகள் உள்ளபோதிலும் தற்போது ஒரு படகு மட்டுமே இயங்குகின்றது. இதில் இறுதியாக இந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் 5 கோடியே 14 லட்சத்து 81 ஆயிரத்து 80 ரூபா செலவிடப்பட்டு நெடுந்தாரகை திருத்தம் செய்யப்பட்டது.
இவ்வாறு படகுகள் பழுதடைந்தும் சேவையில் ஈடுபடாதமை தொடர்பிலும் படகுகளை நிர்வகிக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வினாவியபோது ,
எழுதாரகை நீண்ட நாள்கலாக பழுதடைந்துள்ளது. ஆனால் வடதாரகை அண்மையிலேயே பழுது ஏற்பட்டது. அதன் திருத்தத்திற்கு சில உதிரிப்பாகங்கள் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். கிடைத்தவுடன் சீர் செய்யப்படும்.
நெடுந்தாரகையினைப் பொறுத்தமட்டில் கடந்த மாதம் சில சேவையில் ஈடுபட்ட சமயம் அதன் நங்கூரம் கடலில் வீழ்ந்து காணாமல் போனதனால் அப் படகும் சேவையில் ஈடுபட முடியவில்லை எனப் பதிலளித்தனர்.
நங்கூரம் காணாமல் போனமை தொடர்பில் படகை இயக்கும் கடற்படையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இப் படகுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றபோதும் அதனை இயக்குவது கடற்படையினர்தான். கடந்த வாரம் சேவையில் ஈடுபட்ட சமயம் நெடுந்தீவை அண்டிய பகுதியில் நெடுந்தாரகையின் நங்கூரம் கடலில் தவறி வீழ்ந்து விட்டது. வீழ்ந்த நங்கூரத்தை மீட்பதற்காக கடற்படையினரின் சுழியோடிகள் தேடுதலில் ஈடுபட்டபோதும் கண்டு பிடிக்க முடியவில்லை எனப்பதிலளித்தனர்.