இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி இந்தியா கூட்டணி வசமாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பி. இரா.மோகன் உடல் நலக்குறைவால் கடந்த டிச.10ஆம் தேதியன்று காலமானார். இந்நிலையில் இன்று அவரது வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்தில் திமுகவின் தூணாக விளங்கிய இரா. மோகன், சாதாரண நகரக் கழக செயலாளராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி திமுகவிற்கு பெருமை சேர்த்தவர்.
அவருடைய மறைவு என்பது கோவை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, திமுகவிற்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , ராமநாதபுரம் வட்டாரத்தில் உள்ள திமுக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களை இலக்கு வைத்திருந்தோம். ஆனால் ஈரோடு கள ஆய்வை பார்த்த பின்பு 200 இடங்களை தாண்டி வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம். எதையும் ராகுல் காந்தி சட்டப்படி எதிர்கொள்வார். ஈரோடு இடைத்தேர்தல் இந்தியா கூட்டணி வசமாகும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது ஜனநாயகத்தை படுகுழிக்கு தள்ளக்கூடிய மோசமான செயல். அம்பேத்கர் விவகாரத்தில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிப்போம். மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நன்றாக பார்க்கிறேன்” என தெரிவித்தார்.