வடக்கின் பழைமையான அரசியல் கட்சியொன்று இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பில் சமஷ்டி ஆட்சியை நடைமுறைப்படுத்துமாறு மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் ஸ்தாபகத் தலைவர்களின் ஒருவரான ‘தந்தை செல்வா’ என அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் நினைவிடத்தில் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தமிழ் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையானது சமஷ்டியே என வலியுறுத்தினார்.
“தமிழ் மக்களுடைய ஜனநாயக தீர்ப்பு 1956ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ச்சியாக சமஷ்டி முறையிலான ஆட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதே. அது மக்களுடைய ஜனநாயக தீர்ப்பாக இருக்கின்றது. ஒரு குறித்த மக்களின் ஜனநாயக தீர்பாக அமைந்துள்ளது.”
நாட்டிற்கு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது நாட்டின் ஆட்சி முறையை சமஷ்டி முறைக்கு மாற்றப்பட வேண்டும் என்ற வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் முன்னாள் எம்.பி இதன்போது வலியுறுத்தினார்.
“ஆகவே 75 வருடங்களாக வியாபித்துள்ள இந்த கட்சியின் ஆரம்ப நாளை நினைவுகூறுகின்ற இந்த நாளில் புதிதாக வந்துள்ள அரசாங்கத்திற்கும் நாங்கள் ஒரு செய்தியை சொல்லுகின்றோம். சர்வதேச சட்டத்திலே ஒரு மக்களாக கனிக்கப்படுகின்ற நாம் ஒரு தேசம். எங்களது ஜனநாயக தீர்ப்பிற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதாக வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். அந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டுமென்பது எமது கோரிக்கை. அதனை செய்கின்றபோது நீண்டகாலமாக எவ்வித சலனமும் இன்றி தொடர்ச்சியாக சமஷ்டி ஆட்சி முறைமைக்கு எமது ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும். என்று வடக்கு, கிழக்கு தமிழ் சொல்லும் இந்த ஜனநாயக தீர்ப்பை மதித்து அந்த ஆட்சி முறை மாற்றம் புதிய அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஆட்சியாளர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.”
பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இந்தியத் தலைவர்களுடன் நடத்திய எந்தவொரு கலந்துரையாடலிலும் இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பு மாற்றம் குறித்து குறிப்பிட்டதாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், இலங்கையின் அரசியலமைப்பின்படி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளின் அரச தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் டிசம்பர் 4 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு மற்றும் வடக்கு, கிழக்கு மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.
“இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதை எங்கள் கட்சியின் நிலைப்பாடாக கூறினோம்.” என ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்திருந்தார்.
அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள நிலைப்பாட்டை புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் போது ஆராய முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை தயாரிப்பின்போது ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி கட்டமைப்பை வலியுறுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலையீட்டுடன் வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் ஒற்றையாட்சியையும் பௌத்த மதத்தின் முதன்மையையும் பாதுகாக்கும் மைத்திரி-ரணில் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை இலங்கையின் புதிய அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்வதற்கான விருப்பத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.