கன்னட சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் ‘காந்தாரா’ என்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘காந்தாரா 2’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இதனிடையே இவர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ‘ஜெய் அனுமான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து ரிஷப் ஷெட்டி சந்தீப் சிங் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு “சத்ரபதி சிவாஜி மகாராஜ்” என தலைப்பிடப்பட்டுள்ளது. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாகிறது. பிரமாண்டமான பட்ஜெட்டில் இப்படம் தயாராகி வருகிறது. இப்படம் வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிஷப் ஷெட்டி ‘அனிமல்’ பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘சந்தீப் ரெட்டி வங்காவைப்போல் யாராலும் சிந்திக்க முடியாது. அவருடன் இணைந்து ஏதாவது ஒரு படத்தில் பணிபுரிய விரும்புகிறேன்’ என்றார்.
