வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணத்திலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களே, வடக்கு மாகாணத்தில் விளையும் நெல்லின் பெரும்பகுதியைக் கொள்வனவு செய்வதற்குரிய பொறிமுறை உருவாக்கப்படும் என அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் ஆளுநர் நா.வேதநாயகன் இருவரும் தெரிவித்தனர்.
கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இருவரதும் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 21ம் திகதி சனிக்கிழமை மாலை வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது.
ஆரம்பத்தில் கருத்துவெளியிட்ட ஆளுநர், அரிசியின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பால் ஏழைகள் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகக் குறிப்பிட்டதுடன், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அரிசியை விற்பனை செய்யக் கூடிய நிலைமை இல்லாதிருப்பதற்கான காரணத்தைக் கேட்டறிந்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியையும் நிர்ணய விலையில் விற்பனை செய்யாமல், அவற்றின் ‘லேபல்கள்’ மாற்றப்பட்டு அதிகரிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அரிசி ஆலை உரிமையாளர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் இ.சந்திரசேகரன் அவர்கள், அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டமை எல்லோருக்கும் தெரியும் எனவும், அவ்வாறான நிலைமை தொடரக்கூடாது என்பதில் அரசாங்கம் கவனத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அரிசி ஆலை உரிமையாளர்களான உங்களை நஷ;டத்தில் வீழ்த்துவதையோ மக்களை கஷ;டத்தில் வீழ்த்துவதையோ விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் அரசாங்கம் எதிர்காலத்தில் 3 இடங்களில் புதிதாக அரிசி ஆலையை அமைப்பதற்கு திட்டமிடுவதாகவும் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் நெல்லைக் கொள்வனவு செய்தபோது நீங்கள் அதை அரிசியாக்கும்போது நிர்ணயமாகும் விலையைவிட தற்போது அதிகவிலைக்கே விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார்.
அரிசி ஆலை உரிமையாளர்களை பழிவாங்குவதாக நினைக்க வேண்டாம் என்றும் அதிகமான ஏழைகள் வாழும் மாகாணம் எமது மாகாணம் என்பதைக் கவனத்தில் எடுத்து சமூகப்பொறுப்புடன் செயற்படுமாறும் வலியுறுத்தினார்.
இங்கு கருத்து வெளியிட்ட மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர், வடக்கு மாகாணத்தின் தேவையை விட இரண்டரை மடங்கு அதிக நெல் உற்பத்தி செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்துவெளியிட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள், வடக்;கு மாகாண விவசாயிகளின் நெல்லை வேறு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் பியர் உற்பத்திக்கும் கொள்வனவு செய்கின்றார்கள். அத்துடன் இங்கிருந்து அவர்கள் நெல்லைக் கொள்வனவு செய்துகொண்டு சென்று திருப்பி எங்களுக்கு அதிக விலைக்கு வழங்குகின்றனர்.
எங்களுக்கு வங்கிகள் ஊடாக அதிகளவான கடன் வசதிகள் கிடைப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு கிடைக்கின்றது. இங்கு போதியளவு களஞ்சிய வசதிகள் இருக்கும் நிலையில், வங்கிகள் கடன் எல்லையை அதிகரித்து வழங்கினால் எம்மால் விவசாயிகளிடமிருந்து அதிகளவு நெல்லைக் கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்டனர்.
மேலும், நெல் அறுவடைக்கு முன்னராகவே நெல்லுக்கான மற்றும் அரிசிக்கான விலையை நிர்ணயம் செய்வதன் ஊடாக இவ்வாறான நெருக்கடி நிலைமையைத் தவிர்க்க முடியும் எனவும் குறிப்பிட்டனர்.
நெல் மற்றும் அரிசி விலை நிர்ணயம் தொடர்பில் துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடுவதாக கௌரவ அமைச்சர் குறிப்பிட்டதுடன் வங்கிகளுடன் கலந்துரையாடுவதாக கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் ஏற்கனவே ஆலைகளின் இருப்பிலுள்ள அரிசிகள் தற்போதைய நிலைமைக்குப் போதுமானளவில் இருப்பதாகவும் விலை அதிகரிப்பு இனி இருக்காது எனவும் குறிப்பிட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்னும் ஒரு மாதத்தில் அரிசியின் விலை 200 ரூபாவை விட நிச்சயம் குறைவடையும் எனக் குறிப்பிட்டனர்.
இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலராக பதில்கடமையாற்றும் திருமதி எழிழரசி அன்ரன்யோகநாயகம், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலர் கே.கனகேஸ்வரன், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் திரேஸ்குமார், வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன், வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் ந.திருலிங்கநாதன், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி எஸ்.குகதாஸ், நெல் கொள்வனவு சபையினர், நுகர்வோர் அதிகார சபையினர் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.