தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் கே பாலசந்தர். 1965-ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், கடைசியாக பொய் என்ற படத்தை இயக்கியிருந்தார். ரசிகர்களாலும் திரையுலகினராலும் இயக்குநர் சிகரம் என்றழைக்கப்படும் கே பாலசந்தர், 2014ம் ஆண்டு மறைந்தார்.அவர் மறைந்தாலும் அவரது படைப்புகளும், அவர் உருவாக்கிய நட்சத்திரங்களும் இன்றும் அவரின் திரை ஆளுமைக்கு சாட்சியாக விளங்குகின்றன.9 தேசிய விருதுகள் வென்றுள்ள கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதாசாகிப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது. இவரது பயிற்சிப் பட்டறையில் இருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்த பலரும் இன்று ராஜநடை போட்டு வருகின்றனர். இயக்குநர்கள் வஸந்த், ஹரி, சுரேஷ் கிருஷ்ணா, நடிகர்களில் ரஜினி, விவேக், பிரகாஷ்ராஜ், நாசர் என பெரும் பட்டாளமே உள்ளது. கே பாலசந்தரின் செல்லப் பிள்ளைகளாக வலம் வந்தவர்களில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் மிக முக்கியமானவர்கள். இயக்குனர் கே.பாலசந்தரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எத்தனை படங்கள்… அத்தனையும் பாடங்கள். பள்ளியாகவும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்து பயிற்றிப் பல கல்வி தந்த ஆசான் கே.பாலசந்தரின் நினைவு நாள் இன்று. அவரிடம் பயின்றவை என்றும் என் நினைவில் நிற்கும். என்னை வழி நடத்தும். அவர் புகழ் நிலைக்கும்’ என கூறியுள்ளார்.