“நான் வெட்கத்துடனும், தயக்கத்துடனும் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஆனால், இப்போது, என் சக மாணவர்களை தலைவராக இருந்து வழிநடத்திச் செல்வதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நன்றி விஷன்ஸ்!’’
– பமிலன், 11 வயது, நாவற்குளி மகா வித்தியாலயம், தென்மராட்சி வலயம்.
Visons Global Empowerment நிறுவனம் மற்றும் Ratnam Foundation UK இணைந்து தென்மராட்சி வலயத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம் /றிபேர்க் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் /நாவற்குளி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 37 இளம் தலைவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியினை நடாத்தியது.
தென்மராட்சி வலயத்தில் கடந்த மார்கழி மாதம் 16 முதல் 20-ம் திகதி வரை நடத்தப்பட்ட இந்த தலைமைத்துவப் பயிற்சிப்பட்டறையில் தரம் 6, 7, 8 மற்றும் 9-ல் கல்வி கற்கும் மாணவர்கள் தலைமைத்துவம் சார்ந்த பங்கேற்றல் முறை செயற்பாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பல், தலைமைத்துவம், குழுசெயல்பாடு, தொடர்பாடல், திட்டமிடல், நேர முகாமைத்துவம் மற்றும் முன்வைப்பு திறன் சார்ந்த திறன் விருத்திக்கும், தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வாழ்க்கை தொடர்பான ஊக்குவிப்பிற்க்கும் இந்தப் பயிற்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம். ஐந்து நாட்கள் காலை 8.30 தொடக்கம் மாலை 1.30 மணிவரை நடைபெற்ற இந்த பயிற்சிப் பட்டறையில் சிறந்த முறையில் மாணவர்கள் தங்களது தலைமைத்துவம் சார்ந்த துலங்கல்களை வெளிப்படுத்தியிருந்தார்கள். குறிப்பாக, பயிலுனர்கள் நாளாந்த செயற்பாடுகளை எவ்வாறு திட்டமிட்டு, ஒழுங்கமைத்து செயற்படுகின்ற வழிப்படுத்தலை பெற்றுக் கொண்டனர். இப்பயிற்சியில் ஒவ்வொரு மாணவரும் தமக்கான சுயவிருத்தி திட்டம் (Personal Development Plan) ஒன்றை வடிவமைத்தமை இப்பயிற்சி நெறியின் சிறப்பை மேம்படுத்தியது.
தென்மராட்சி வலயத்தின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புடன், நடாத்தப்பட்ட இந்த பயிற்சி பட்டறை, விசன்ஸ் நிறுவனத்தின் தலைவர், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் விசன்ஸ் நிறுவனத்தின் ஏனைய நான்கு பயிற்சியாளர்களின் நெறிப்படுத்தலுடன் நடாத்தப்பட்டிருந்தது.