இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது பின்னர் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில், படத்தின் புரமோஷனுக்கான இயக்குநர் பாலா நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அப்படி, நேர்காணல் ஒன்றில், “வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியதும் நடிகர் அருண் விஜய்காக சில மாற்றங்களைச் செய்தீர்களா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு பாலா, “வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகவில்லை. கன்னியாகுமரியின் சுற்றுலா தளங்களில் நேரடியாக படப்பிடிப்பை நடத்தியதால் சூர்யாவை காண பல ரசிகர்கள் கூடிவிட்டனர். அதனால், படப்பிடிப்பை சரியாக நடத்த முடியவில்லை. பின், நானும் சூர்யாவும் ஆலோசித்துதான் அந்த முடிவை எடுத்தோம். எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் ஏதாவது தவறு செய்தால்கூட அதைக் கேட்கும் உரிமையை சூர்யாவுக்கு அதிகமாகவே வழங்கியிருக்கிறேன்” என்றார்.
