ஷங்கரின் உதவி இயக்குனராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் படங்களை இயக்கி வருபவர் பிரபல இயக்குனர் அட்லி. இவரது இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தெறி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்தியில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை அட்லியின் மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து “பேபி ஜான்” என்ற படத்தை தயாரித்துள்ளன. அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ளார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25ம் தேதி பேபி ஜான் திரைப்படம் வெளியானது. ஆக்சன் படமான இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பேபி ஜான் திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வெளியான 4 நாளில் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் தொடர்ந்து வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.