புஷ்பா 2 கூட்டநெரிசல் தொடர்பான வழக்கில் ஜாமினில் அல்லு அர்ஜுன் வெளிவந்துள்ள நிலையில் அவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5 அன்று வெளியானது. இத்திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தை பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் மூளைச்சாவு அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதியின்றி தியேட்டருக்கு வெளியே திடீரென அல்லு அர்ஜூன் ரோடு ஷோ சென்றதாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அல்லு அர்ஜுனை காவல் துறையினர் கைது செய்து ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் வைத்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை ஆனார். இந்த சர்ச்சைக்கு மத்தியில் அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் சூரிய தேவர நாக வம்சி வெளியிட்டு உள்ளார். இந்த படத்தை திரி விக்ரம் இயக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே அல்லு அர்ஜுன், திரி விக்ரம் கூட்டணியில் வந்த ஜுலாயி, சன் ஆப் சத்யமூர்த்தி, அலாவைகுண்டபுராமுலு படங்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.