அண்மையில் இலங்கைத் தீவெங்கிலும் உள்ள அருங்கலை விற்பன்னர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பெறும் போட்டியில் இலங்கை தேசிய அருங்கலைகள் பணியகத்தின் தங்க விருதினைத் தட்டிக் கொண்ட யாழ்ப்பாண மண்ணின் அருங்கலை வித்தகன் பத்மநாதன் சியாம்கிருஸ்ணா அவர்களை யாழ்ப்பாணம் வாழ் மக்கள் மாத்திரமல்ல, உலகெங்கும் வாழும் மக்கள் பலரும் பாராட்டி மகிழ்கின்றார்கள்.
மேற்படி வெற்றியாளர் பத்மநாதன் சியாம்கிருஸ்ணா அவர்கள் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் வாழ்ந்து வருகின்றார். அவரது தந்தையார் பத்மநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சிறந்த வயலின் கலைஞராக விளங்கியவர்.
தந்தையார் வழியில் கற்று வயலின் வித்துவானாகத் திகழ்ந்த பத்மநாதன் சியாம்கிருஸ்ணா அவர்கள், நாளடைவில் வயலின் கருவிகளை யாழ்ப்பாணத்தில் தனது கைகளாலும் தனது அனுபவத்தாலும் செய்யும் வித்துவத்தைக் கற்றுக்கொண்டார்.
2021ம் ஆண்டு தான் கற்ற அருங்கலைகள் தொடர்பான அனுபவத்தால் சில கருவிகளைத் தயாரித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் விருதுகளைத் தட்டிக் கொண்டார்.
பின்னர், 2024ம் ஆண்டு இலங்கை அருங்கலைகள் பணியகம் தேசிய ரீதியில் நடத்திய அருங்கலை தயாரிப்புக்கள் போட்டியில் தனது புதிய தயாரிப்பான இரட்டை வயலின் கருவியொன்றை மிகவும் நுட்பமாகத் தயாரித்து தேசிய ரீதியில் நடத்தப்பெற்ற போட்டிக்கு அனுப்பி அதற்காக தங்க விருதைத் தட்டிக்கொண்டார்.
வடமாகாண கைத்தொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் தந்த உற்சாகமும் ஊக்குவிப்புமே, தன்னை இவ்வாறான அதி உயர் விருதினைத் தட்டிக் கொள்ளும் வாய்ப்பைத் தந்தது என்று கூறிக்கொள்ளும் வெற்றியாளர் பத்மநாதன் சியாம்கிருஸ்ணா அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பேட்டியொன்றில் “வட மாகாணத்தில் உள்ள அருங்கலைகளில் நாட்டம் கொண்ட அன்பர்கள் புதிய தயாரிப்புக்களை தயாரித்து தேசிய ரீதியில் நடத்தப்பெறும் போட்டிகளில் விருதுகளைத் தட்டிக் கொண்டு தாம் பிறந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் பெருயை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
இங்கு காணப்படும் படங்களில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவர் தனது குடும்பத்தினரோடு கலந்து கொண்டவையும் காணப்படுகின்றன.