யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் புத்திஜீவிகளில் சிலர் தமிழர் தாயகத்தில் கிராம மட்டத்தில் விவசாய அமைப்புகளைச் சந்தித்து, விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வருகிறார்கள். இன்னொருபக்கம் கடல் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சந்திரசேகரன் கடல் தொழிலாளர் சங்கங்களின் மத்தியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வலைப்பின்னலைப் பலப்படுத்தி வருகிறார்.
தேசிய மக்கள் சக்தி என்பது ஜேவிபியும் துறைசார் நிபுணர்களும் புத்திஜீவிகளும் இணைந்த ஒரு கட்டமைப்பு ஆகும். ஜேவிபியின் அரை நூற்றாண்டுக்கு மேலான அனுபவத்திலிருந்து கட்டி எழுப்பப்பட்ட ஒரு கட்டமைப்பு அது. எல்லாத் துறைகளுக்குமான கட்டமைப்புகள் தேசிய மக்கள் சக்திக்குள் உண்டு. எனவே தமிழ் பகுதிகளிலும் அவர்கள் கட்டமைப்புகளை விருத்தி செய்வார்களாக இருந்தால் அடுத்தடுத்த தேர்தல்களிலும் அவர்கள் தங்கள் வெற்றிகளை உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
ஏனெனில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளிடம் பலமான கட்டமைப்புகள் எவையும் கிடையாது. ஒவ்வொரு பிரிவினருக்குமான விசேஷ கட்டமைப்புகள் எவையும் கிடையாது. ஆனால் என்பிபி அப்படியல்ல. என்பிபி யின் அடித்தளம் ஜேவிபி. அது சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தோற்றம் பெற்றது.அவர்களிடம் கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்குரிய அமைப்பாக்க ஒழுக்கம் உண்டு. இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம். இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட ஒரு இயக்கம். தன் சொந்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுந்தது. எனவே அழிவுகளில் இருந்து எழுந்த அனுபவம் அவர்களுக்கு உண்டு.
அதைவிட மேலதிகமாக இப்பொழுது என்பிபி என்ற அரசியல் இயக்கத்துள் இடதுசாரி மரபில் வராத புதுஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் உண்டு. உதாரணமாக இப்பொழுது உள்ள பிரதமர் டொக்டர் ஹரிணி இடதுசாரி ஒழுக்கத்துக் கூடாக வந்தவர் அல்ல. அவர் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்ட ஒரு புத்திஜீவி. அவரைப் போன்றவர்களையும் சுதாகரித்துக் கொண்டு ஒரு கட்டமைப்பை உருவாக்கக்கூடிய விரிவு தேசிய மக்கள் சக்தியிடம் உண்டு. எனவே தேசிய மக்கள் சக்தியிடம் உள்ள கட்டமைப்புகள்,அமைப்பாக்க அனுபவம் போன்றவற்றின் அடிப்படையிலும், கடந்த ஆண்டு அவர்கள் பெற்ற இரண்டு தேர்தல் வெற்றிகளின் அடிப்படையிலும் சிந்தித்தால்,அவர்கள் தமிழ்ப் பகுதிகளில் பலமான கட்டமைப்புகளை உருவாக்க முடியும்.
தமிழ் மக்கள் மத்தியில் செயற்பாட்டு கட்டமைப்புகள் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளன என்பதற்கு பல்கலைக்கழக சமூகம் குறிப்பாக மாணவ அமைப்புக்கள் ஓர் எடுத்துக்காட்டு ஆகும். பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜேவிபி முக்கியஸ்தர் எனக்கு சொன்னார்,இலங்கைத் தீவிலேயே அதிகம் வினைத்திறனோடு போராட வேண்டிய ஒரு பல்கலைக்கழகம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்தான்.ஆனால் அது போராட முடியாத ஒரு பல்கலைக்கழகமாகக் காணப்படுகிறது என்று.2009க்குப்பின் யாழ் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய போராட்டக் களங்களில் துணிந்து முன் நின்றிருக்கிறது. ஆனாலும் அண்மை ஆண்டுகளாக அது சோர்ந்து காணப்படுகிறது.
குறிப்பாக தமிழ்ப் பொது வேட்பாளரின் விடயத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் மக்கள் அமைப்புக்குள் காணப்பட்டார்கள். ஆனால் அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் அதிகம் ஆர்வமாகக் காணப்படவில்லை. நாங்கள் தமிழ் மக்கள் பொதுச் சபையை ஆதரிக்கிறோம் ஆனால் பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்ற ஒருவித மயக்கமான நிலைப்பாடு அவர்களிடம் காணப்பட்டது. அதாவது தேர்தல் நடவடிக்கைகளில் கட்சிகளோடு இணைந்து செயல்படுவதில் அவர்களுக்கு ஒரு வித தயக்கம் இருந்தது.
அதுமட்டும்ல்ல தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சமூகம் துலக்கமான முடிவுகளை எடுக்கவில்லை. தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட பொழுது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பேரவையோடு நின்றது. ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் அவ்வாறில்லை. அரசறிவியல் துறைத் தலைவராகிய பேராசிரியர் கணேசலிங்கம் தமிழ்மக்கள் பொதுச்சபைக்குள் முக்கியஸ்தராக காணப்பட்டார்.தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள்ளும் அவர் இருந்தார். ஆனால் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒரு சமூகமாக தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை.
பல்கலைக்கழக புலமைசாரா ஊழியர் சங்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக நின்றது.அவர்கள் பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை. ஆசிரியர் சங்கத்தின் ஒரு பகுதி தெளிவாக தேசிய மக்கள் சக்தியோடு நின்றது.இன்னொரு பகுதி வழமைபோல தற்காப்பு நிலையெடுத்து நடுவே நின்றது. அங்கே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவான விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும்தான் அதிகம்.ஆனால் அவர்கள் அமைப்பாக்கப்படவில்லை.ஒருங்கிணைக்கப்படவில்லை.அதனால்,உதிரிகளகக் காணப்பட்டார்கள்.பல்கலைக்கழக மாணவர்களும் பொது வேட்பாளரின் விடயத்தில் ஒரு சமூகமாகத் துடிப்போடு தொடர்ச்சியாகச் செயல்படவில்லை.
அவ்வாறான ஒரு பின்னணியில், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான புத்திஜீவிகள் ஊடகங்கள் முன் தோன்றி அறிக்கை விட்டார்கள். முதலில் அவர்கள் விட்ட அறிக்கையில் துணிச்சல் குறைவாக இருந்தது. தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனைத் தெளிவாகச் செல்வதற்கு தயங்கினார்கள். ஆனால் தேர்தல் முடிவுகளின் பின் இப்பொழுது துணிச்சலாக முன்வந்து தமிழ்த் தேசியவாத அரசியல் ஒருவித “மலட்டு அரசியல்” என்ற பொருள்பட விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள்.
யாழ். பல்கலைக்கழகத்தின் நிலை இது. யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவ ஆசிரிய சமூகங்களின் நிலை இது. இப்படித்தான் கடல் தொழிலாளர் சங்கங்கள், கூட்டுறவாளர் சங்கங்கள், விவசாய அமைப்புகள் போன்றவற்றின் நிலையும். இதில் சில அமைப்புக்கள் ஒன்றில் ஏதாவது ஒரு கட்சியோடு நிற்கின்றன.அல்லது அரசாங்கத்தைப் பகைக்க அஞ்சுகின்றன.
ஜனாதிபதித் தேர்தலின் போது, பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் காணப்பட்ட மக்கள் அமைப்புகள்கூட பகிரங்கமாக அறிக்கை விடத் தயங்கின. ஏனென்றால் புதிய அரசாங்கத்தை, புதிய ஜனாதிபதியைப் பகைப்பதனால் தமக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய நெருக்கடிகளைப் பற்றிய பயம் அந்த அமைப்புகளிடம் இருந்தது.
இப்படிப்பட்டதோர் பின்னணியில், தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் பொருத்தமான வினைத்திறன் மிக்க வலையமைப்பும் கிடையாது. கட்டமைப்புகளும் கிடையாது. ஆனால் நான் எனது கட்டுரைகளில் அடிக்கடி கூறுவதுபோல கொடுமையான யதார்த்தம் என்னவென்றால்,தமிழ்க் கிராமங்களில் அரச புலனாய்வுத்துறைக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளை விடவும் ஆழமான பரவலான வலையமைப்பு உண்டு என்பதுதான்.
இப்படிப்பட்டதோர் பாரதூரமான வெற்றிடத்தில், இப்பொழுது அரச பலத்துடன், தேர்தலில் கிடைத்த வெற்றிகள் தந்த உற்சாகத்தோடு, தேசிய மக்கள் சக்தியானது தமிழ் பகுதிகளில் தனது வலையமைப்பைப் பலப்படுத்தி வருகின்றது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்களில், யாழ்பாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூவரும் தமிழ் மக்களுக்கு அதிகம் தெரிய வந்தவர்கள் அல்ல. அவர்கள் தமிழ் மக்களுடைய போராட்டக் களங்களிலும் காணப்பட்டதில்லை; ஜேவிபியின் தென்னிலங்கை மையப் போராட்டங்களிலும் துருத்திக் கொண்டு தெரிந்ததில்லை. ஆனால் தேர்தலில் வென்றார்கள். எப்படி?
தமிழ்ப் பகுதிகளில் தனது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது ஜேவிபி தன்னுடைய செயற்பாட்டு ஒழுக்கத்துக்குடாகவோ அல்லது கொள்கை விளக்கத்துக்கு ஊடாகவோ அவர்களைத் தெரிவு செய்யவில்லை என்பதைத்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நிரூபித்தது. திருகோண மலையில் இருந்து தெரிவு செய்யப்பட்டவரும் துணை வெளி விவகார அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திர ஒருவர்தான் ஒப்பீட்டளவில் ஜேவிபி பாரம்பரியத்தில் வந்தவர். யாழ்ப்பாணத்தில், வன்னியில் நிலைமை பெருமளவுக்கு அவ்வாறில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில், தனது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது என்பிபி ஏனைய தென்னிலங்கை மையக் கட்சிகளைப் போலவே செயல்பட்டது. ஆனால் அதே தவறை அவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் விடுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.
அரசாங்கம் அனேகமாக சில மாதங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடும். மாகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு. ஏனென்றால் இந்தியாவைத் திருப்திப்படுத்த வேண்டும். எனவே அடுத்த ஆண்டில் இரண்டு தேர்தல்களை எதிர்பார்க்கலாம். காசு ஒரு பிரச்சினையாக இல்லையென்றால், தேர்தல் நடக்கும்.
தேர்தல்களில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் கடந்த ஆண்டு நடந்து கொண்டதைப்போல தங்களுக்குள் ஐக்கியப்படாமல்,சிதறி நின்று வாக்குக் கேட்டால் என்ன நடக்கும்? அதன் விளைவாக அதிகளவு சுயேச்சைகள் களமிறக்கப்பட்டால் என்ன நடக்கும்?கடந்த ஆண்டு, நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குக் கசப்பான ஒரு தண்டனையை வழங்கினார்கள். அந்தத் தண்டனையிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டால் இந்த ஆண்டிலாவது தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம்.