”முக்கிய பதவிகளுக்கு ”தலையாட்டி”களை நியமித்தும் பேச்சாளர் பதவியை மீண்டும் கைப்பற்றியும் கட்சியின் விசுவாசிகளை வெளியேற்றியும் இடைக்காலத் தடைகளை விதித்தும் சர்வாதிகாரத்தனமாக தமிழரசுக்கட்சியை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சேடமிழுத்துக் கிடக்கும் தமிழரசுக் கட்சியின் இறுதிக் கிரியைக்கான ஏற்பாடுகளை ‘சுமந்திரன் அணி’ தடபுடலாக செய்து முடித்துள்ளது”
கே.பாலா
தமிழ் தேசிய இனத்தின் தாய் கட்சி எனக்கூறப்படும் இலங்கை தமிழரசுக்கட்சி இலங்கை அரசியலில் தனது 75 ஆவது ஆண்டு பவளவிழாவை ஒருபுறம் கொண்டாடும் நிலையில் மறுபுறம் அதன் ஆயுளுக்கு முடிவுகட்டும் தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ள சுமந்திரன் அணி அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று வருவதனை அண்மையில் நடந்து முடிந்த தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் அவதானிக்க முடிந்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்காக, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இக்கூடத்திலேயே தமிழரசுக்கட்சியின் இறுதிக்கிரியைக்காண ஏற்பாடுகளை சுமந்திரன் அணி தடபுடலாக செய்து முடித்துள்ளது.
இதற்கு முன்னரான மத்தியகுழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமை தொடர்பாக விவாதங்கள் இடம்பெற்று குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.அந்தவகையில், கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்பதா அல்லது அவரே தொடர்ந்து தலைவராக செயற்படுவதற்கு அனுமதிப்பதா என்பது தொடர்பாக வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.இதன்பின்னர், தலைவரை நீக்கும் அதிகாரம் மத்திய குழுவிற்கு இல்லை எனத் தெரிவித்து வழக்கு தாக்கல் ஒன்றும் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நான் விலகவில்லை.அதன் பிரகாரம் கட்சியின் தலைமைப் பதவியில் நானே தலைவராகத் தொடர்கின்றேன். ஆகவே தலைமைப் பதவிதொடர்பில் வாக்கெடுப்பொன்றை நடத்தவேண்டிய அவசியமில்லை என்று மாவை சேனாதிராஜா கட்சியின் பதில் பொ துச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்தார்.
மேலும், ஒக்டோபர் 7ஆம் திகதி என்னால் சிறிதரன் மற்றும் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமானது பதவி விலகும் அறிவிப்பை உள்ளடக்கியது அல்ல. நான் கட்சியின் தலைமைப் பொறுப்பினை சிவஞானம் சிறிதரனை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறே கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு மாதங்களாகின்றபோதும் சிறிதரன் தலைமைப் பதவியை பொறுப்பேற்காமையின் காரணமாக நானே தலைமைப்பதவியில் நீடிக்கின்றேன்.அந்த வகையில், 28ஆம் திகதி நடை பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பை நடத்த முடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மாவையின் இக்கடிதம் தொடர்பில் கருத்துரைத்த கட்சியின் முன்னாள் எம்.பி.யும் மாவை சேனாதிராஜாவை தலைவர் பதவியிலிருந்து அகற்ற உள் வீட்டுக் கலகம் செய்பவருமான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அதனைக் கட்சியின் செயலாளர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால் அதன் பின்னர் பதவி விலகலை திரும்பப் பெறுவதாகக் குறிப்பிட்டு மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கின்றார்.பதவி விலகல் செய்தால் அதில் மாற்றம் இருக்கமுடியாது. பதவி விலகி இரண்டு மாதங்களின் பின்னர் அதனை திரும்பப் பெறுவதாகக் குறிப்பிட்டு முற்திகதியிடப்பட்ட கடிதத்தை அனுப்பிவைப்பதனால் எந்தப் பயனுமில்லை.தமிழரசுக்கட்சியின் தலைமைப் பதவியில் மாவை சேனாதிராஜா நீடிப்பதை அங்கீகரிப்பதா? இல்லையா? என்பது பற்றித் தீர்மானிக்கப்படவுள்ளது.இதன் பொருட்டு டிசம்பர் 28ஆம் திகதி வவுனியாவில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எனக் கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில் தான் கடந்த 28 ஆம் திகதி சனிக்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா கலந்துகொள்ளாத நிலையில் சுமந்திரன் அணி தமது இஷ்டத்துக்கு தீர்மானங்களை எடுத்து தமது அடிவருடிகளையும் விசுவாசிகளையும் ,தலையாட்டிகளையும் பதவிகளுக்கு நியமித்துள்ளதுடன் கட்சியின் விசுவாசிகளை, தமிழ் தேசிய உணர்வாளர்களை தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றியும் இடைநிறுத்தியும் தமிழரசுக்கட்சியின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடித்துள்ளது .இதேவேளை இந்தக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சி மீது கட்சியினரே போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக சுமந்திரன் கூறியுள்ளார். இதிலிருந்தே குறித்த வழக்குகளின் பின்னணியில் தானே இருப்பதை சுமந்திரனே ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தக்கூட்டத்தில் சுமந்திரன் அணியின் கைகளே ஓங்கியிருந்ததால் கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டனர். இதற்கமைய கட்சியின் முக்கியஸ்தர்களான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் எம்.பி .சரவணபவன், உள்ளிட்ட இன்னும் சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதேவேளை கட்சியின் மத்திய குழு உறுப்பினரான வைத்தியர் சிவமோகன் மீது தேர்தல் காலங்களில் கட்சியினுடைய வேட்பாளர்களை நேரடியாக தாக்கி ஊடக சந்திப்புக்களை நடத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவரும் கட்சியிலிருந்து இடை நிறுத்தி வைக்கப்பட்டதுடன் அவரிடம் விளக்கம் கோருவது என்றும் தீர்மானிக்கப்பட்ட து.
அதுமட்டுமன்றி நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள், தமிழ் தேசியக்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று பொது வேட்பாளராக போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரான அரியநேத்திரன் ஏற்கனவே இடை நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவரையும் கட்சியிலிருந்து விலக்கலாம் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டது. மேலும் வேறுகட்சிகள் மற்றும் குழுக்களுக்காக பிரசாரம் செய்தவர்கள் மற்றும் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக ஜனாதிபதி தேர்தலில் பிரசாரம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதெனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை வேறுகட்சிகள் மற்றும் குழுக்களுக்காக பிரசாரம் செய்தவர்கள் மற்றும் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக ஜனாதிபதி தேர்தலில் பிரசாரம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதெனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதால் விரைவில் சிறீதரன். சிறிநேசன் ஆகிய எம்.பி.க்களுக்கு ஆப்பு செருகப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன.இதன்மூலம் இவர்களில் ஒருவரின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டு தோற்றவர் மீண்டும் எம்.பி.யாகவும் திட்டங்கள் உள்ளதாகவும் உள் ”வீட்டு”தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்த மத்திய குழுக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா நியமிக்கப்பட்டதுடன் கட்சியின் அடுத்த கூட்டம் வரையில் பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானம் நியமிக்கப்பட்டார்.அத்துடன் ஏற்கனவே கட்சியின் பாராளுமன்றக் குழுவின் பேச்சாளராகவும் கட்சியின் பேச்சாளராகவும் சிறிநேசன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளராக மீண்டும் சுமந்திரன் நியமிக்கப்பட்டார்.
இவ்வளவு தீர்மானங்களும் சர்வாதிகாரத்தனமாக எடுக்கப்பட்டிருந்தாலும் கட்சியின் பேச்சாளராக நியமிக்கப்பட்ட சுமந்திரனால் இத்தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டதாகவே ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஏனெனில் கட்சியின் மத்தியகுழுவிலுள்ள 46 பேரில் அரியநேத்திரனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாலும் தவராசா,சரவணபவன் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளதாலும் மிகுதியாகவுள்ள 43 பேரில் 20பேர்வரையில் மாவை சேனாதிராஜா தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்துள்ளனர் 16 பேர்வரையிலேயே அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்துள்ளதுடன் ஏனையவர்கள் இருபக்கமும் சாராது இருந்துள்ளனர் எனவே இங்கு ஏகமனதான தீர்மானம் எடுக்க முடிந்திருக்காது என்பது வெளிப்படை.
ஆகவே தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தமது இலக்குகளை அடைவதற்காக ,தமது இலக்குகளுக்கு தடையாகவுள்ளவர்களை அகற்றுவதற்காக,தமிழ்தேசியத்திற்கான குரலை நசுக்குவதற்காக,தமது மேதாவித்தனத்திற்கு கட்டுப்படாதவர்களை அடக்குவதற்காக ,அச்சுறுத்துவதற்காக ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்ற பெயரில் சுமந்திரன் அணி முன்னெடுத்த இந்த ”பயிர் எடுப்பு”க்களினால் தமிழரசுக்கட்சியில் ”களை”களே இன்னும் அதிகம் வளரப்போகின்றன . அந்தக் ”களை ”கள் தமிழரசுக்கட்சியின் வாக்கு விளைச்சலை அழிக்கப் போகின்றன.
நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் சுமந்திரன் அணி தமக்கு வேண்டியவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியமை தமிழரசுக்கட்சி வடக்கில் படுதோல்வியடைய முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது.தற்போது அதே சுமந்திரன் அணியே தமக்கு வேண்டியவர்களை தமிழரசுக்கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நியமித்துள்ளமை தமிழரசுக்கட்சியின் முடிவு காலமாகவே அமையப் போகின்றது.சிறிதரன் தலைமைப்பதவிக்கு வந்து விடக்கூடாதென்பதில் சுமந்திரன் அணி சிலந்திவலை அமைப்பதால் தமிழரசுக்கட்சி விரைவில் தமிழ் மக்களிடமிருந்து பிரிந்து செல்லும், தமிழ் தேசிய அரசியலிலிருந்து காணாமல்போகும் நிலையே பிரகாசமானதாகவுள்ளது.