பெண் அடிமை என்ற நிலையில் இருந்து பெண் அதிகாரம் என்னும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் மகளிர் திறன் மேம்பாடு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மையத்தின் மூலம் 18 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்வதற்கு இந்த மையம் உதவும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: அண்ணா, கருணாநிதி வழியில், ஈ.வே.ராவின் கனவை நினைவாக்கும் விதமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுப் பணிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழுக்கள், சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை உள்ளிட்ட திட்டங்களை உதாரணமாக சொல்லலாம். பெண்கள் கல்வி அறிவை பெற வேண்டும் என்பதன் அடுத்த கட்டமாக, பெண்கள் உயர்கல்வி உறுதி செய்யும் விதமான திட்டங்களை உறுதி செய்து வருகிறோம். விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதி உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. பெண்கள், அதிகாரம், உலக அறிவை பெற வேண்டும் என்பதற்காகத் தான் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகமே உயர்ந்து நிற்கும். பெண் அடிமை என்ற நிலையில் இருந்து பெண் அதிகாரம் என்னும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி எனும் பெயரில் திட்டத்தை தொடங்கி, பெண்களுக்கு திறன் மேம்பாட்டு வளர்ச்சி பணிகளை கொடுத்து வருகிறோம், எனக் கூறினார்.