கனடாவில் கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிவரும், இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் தமது இவ்வருடத்து ‘வர்த்தக தீபம்’ பெருவிழாவில் பல்வேறு துறைகள் சார்ந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்ததுடன் கனடா ஸ்காபுறோ நகரில் நிறுவப்படவுள்ள ‘ஸ்காபுறோ தமிழர் சமூக மையத்திற்கு 10 ஆயிரம் டாலர்களையும் யாழ்ப்பாணம் நல்லூரில் இயங்கும் -இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கள் அவர்கள் தலைமையில் இயங்கும் ‘இளங்கலைஞர் மன்றத்தின் கட்டட திருத்த வேலைகளுக்கு இலங்கைப் பணமாக 5 இலட்சம் ரூபாய்களையும் வழங்கியதன் மூலம் தாங்கள் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவர்களே என்பதையும் பறை சாற்றியுள்ளனர்.
இவ்வாறான நற்பணிகளை ஆற்றும் கனடா-இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் இயக்குனர் சபையினருக்கும் பொதுச் சபையினருக்கும் கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
கனடா-இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் சோம சச்சிதானந்தன் அவர்கள் தலைமையில் இயங்கிய முன்னாள் தலைவர்கள் மற்றும் முன்னாள் செயலாளர்கள் முன்னாள் இயக்குனர் சபை உறுப்பினர்கள் அனைவரதும் கடின உழைப்பின் காரணமாகவே, கடந்த 29-12-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ கொன்வென்சன் மண்டபத்தில் ;நடைபெற்ற ‘வர்த்தக தீபம்’ விழா ஒரு சமூகத்திற்கான விழாவாக வெற்றிகரமாக நடைபெற்றது என்றால் அது மிகையாகாது.
மேற்படி விழாவின் பிரதம விருந்தினராக சட்டத்தரணி தம்பையா ஶ்ரீபதி அவர்களும் சிறப்பு விருந்தினராக இலங்கை வாழ் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான தம்பிஐயா தேவதாஸ் அவர்களும் விசேட விருந்தினராக ‘இன்னிசை வேந்தர்’ பொன் சுந்தரலிங்கம் அவர்களும் கலந்து கொண்டமை விழாவின் தரத்தை மேலும் உ யர்த்தியது என்றால் அதுவும் மிகையாகாது.
மேற்படி விழாவை சிறப்பாக நடத்த இவ்வருடமும் முன்னாள் தலைவர்களான திரு கிருஸ்ணகோபால் செல்லத்துரை, திரு கேதா நடராஜா. தற்போதைய செயலாளர் சோதி செல்லத்துரை மற்றும் திருவாளர்கள் அருண் குலசிங்கம்- அரியராசா- ஜெயவீரசிங்கம்- நடா உதயன் – கருணா உட்பட பலர் இவ்வருட விழாவின் வெற்றிக்கு உழைத்த பெருமக்கள் என்பதையும் அங்கு காணக்கூடக்கூடியதாக இருந்தது.
இவ்வருட ‘வர்த்தக தீபம்’ விழாவில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், சங்கத்தினரால் ‘பல்லினங்களுக்கும் ஊடகப் பணியாற்றும் சிறந்த பத்திரிகை ஆசிரியர்’ என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்றார்.
அத்துடன் மொன்றியால் வர்த்தகப் பெருமகன்(ஏஎம்ஆர்) முத்தையா இராஜகோபால்- மற்றும் சமூகப் பணியில் முன்னின்று உழைத்து வரும் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை ஆகியோருக்கும் முறையே வர்த்தக விருதும் சமூக சேவை விருதும் வழங்கப்பெற்றன.
மேலும் ‘ஈழநாடு’ பரமேஸ்வரன்-கலாநிதி சுப்பிரமணியன் நித்தியானந்தன்- திரு வசந் வேலும்மயிலும்-திருமதி தீபா வசந்த்- கலாநிதி பார்வதி கந்தசாமி-ஒலிபரப்பாளர் எம். பி. கோணேஸ்-திருமதி பிரியா புவிராஜ்- சமூக சேவையாளர் சபா வரதராஜா- மற்றும் சமூக சேவையாளர் எஸ். மதியழகன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பெற்றன.
விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர் ஜஸ்ரின் போல் தொகுத்து வழங்கினார்.
கலைநிகழ்ச்சிகளும் ‘மெகா ரியுனர்ஸ் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி ஆகியனவும் விழாவிற்கு மெருகூட்டின.