– தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைப்பு
ந. லோகதயாளன்
யாழ். வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை – முனை கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்குட்பட்ட மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட செயலர் ஆகியோரை நேற்று சந்தித்து தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் மகஜர்களையும் கையளித்தனர்.
“பருத்தித்துறை – முனை கடற்றொழிலாளர்களின் மீன்பிடி வாடிகள் அகற்றப்பட வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் இரண்டு வாரங்களின் பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரையோரம் பேண் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை பூராகவும் கடற்கரையோரங்களில் மீனவர்களின் மீன்பிடிவாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமே மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இது இவ்வாறிருக்க பருத்தித்துறை – முனை கடற்றொழிலாளர்களின் கரையோர வாடிகளை மாத்திரம் அகற்றுமாறு கரையோர பேண் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது ஏன்? இதனால் எமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படையும்.” – என்று மீனவர்கள் அமைச்சரிடமும் ஆளுநரிடமும் மாவட்ட செயலரிடமும் முறையிட்டனர்.
இதனை உடன் நிறுத்துமாறு அமைச்சர் இ.சந்திரசேகர் குறித்த திணைக்கள அதிகாரிக்குத் தெரியப்படுத்தியதுடன் அடுத்து வரும் அமைச்சரவைக் கூட்டத்தின்போது இதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
நாடு பூராகவும் இந்த நிலை இருக்கும்போது குறித்த ஒரு இடத்து மீனவர்களுக்கு மாத்திரம் வாடிகளை அகற்றுமாறு அரச உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டது.