பு.கஜிந்தன்
இலங்கை அரசியலமைப்பு மற்றும் சுற்றுநிருபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட போதிலும் நடைமுறையில் அது மறுக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார்.
அண்மையில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமைகளை பாதுகாக்கும் முகமாக உரிமைகளை இழக்கும் விளிம்பில் உள்ளவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.
அந்தவகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு விசேட வேலைத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்பதிலிருந்து தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்வது வரை அவர்களுக்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பு மற்றும் சுற்றறிக்கைகள் மூலம் வழங்கப்பட்டும் அவர்கள் நடைமுறையில் பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர்.
குறிப்பாக கூற வேண்டுமானால் இலங்கை அரச வேலைவாய்ப்பை பெறுபவர் எப்பாகத்திலும் கடமையாற்ற வேண்டும் என கூறப்படுகிறது அதுமட்டுமல்லாது தேக ஆரோக்கியம் தொடர்பிலும் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
இவ்வாறான நிலையில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு இலங்கை அரசாங்கத்திற்கு 9 பிரிவுகளின் கீழ் விரிவான அறிக்கையொன்றினை வழங்கியுள்ளது.
குறிப்பாக வலுவிழந்தவர்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது அவர்களுக்கான வேலை வாய்ப்பினை எவ்வாறு வழங்குவது சித்திரை வகைகளில் இருந்து அவ்வாறு பாதுகாப்பது மற்றும் பாரபட்சங்களில் இருந்து எவ்வாறு விடுவிப்பது போன்ற விடயங்களை உள்ளடக்கி மனித உரிமைகள் ஆணைக்குழு விசேடமான ஒரு வேலை திட்டத்தினை நடைமுறைப்படுத்த உள்ளது.
அரச கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் அல்லது வலுவிழந்தவர்கள் தாமாக சென்று தமது சேவைகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் இருந்தும் தற்போது புதிய கட்டடங்கள் கட்டப்படும் போது குறித்த நடைமுறைகளை கடைப்பிடிப்பது குறைவாக உள்ளது.
ஆகவே வட மாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் பல ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில் அவர்களின் தேவைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசேடகவனம் செலுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.