கடந்த 28ம் திகதி சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்ற ‘ஜனனியின் விரல் மீட்டும் ஸ்வரங்கள்’ இசை நிகழ்ச்சி கலந்து கொண்டவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது என்றால் அது மிகையாகாது.
அமைப்பின் ஆதரவில் சத்தியா சுரேஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘ஜனனியின் விரல் மீட்டும் ஸ்வரங்கள்’ இசை நிகழ்ச்சிக்கு ‘ஆரோசை’ இசைக்குழுவினர் பின்னணி இசைவழங்கினர்.
இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம், சிவஶ்ரீ சோமாஸ்கந்தக் குருக்கள். ஒன்றாரியோ மாகாண இணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் மற்றும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் அங்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பெற்றிருந்தனர்.
நிகழ்ச்சிகளை திருமதி அபிசேகா சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
திருமதி சந்தியா சுரேஸ் தனது தீவிர சிரத்தையின் காரணமாக விசேட தேவைகள் உடைய இளம் செல்வி ஜனனி அவர்களை பயிற்றுவித்து அவருக்கு இசைமீதும் ஆர்வத்தை ஊட்டி அன்றைய தினம் செல்வி ஜனனியை மேடையில் ஒரு அனுபவம் உள்ள கீபோர்ட் கலைஞராக மேடையில் சமர்ப்பித்திருந்தார்கள்.
பல அனுபவமிக்க பாடக பாடகிகள் இனிமையான பாடல்களைப் பாட அவர்களின் பாடல்களுக்கு தனது வி சேட திறமையில் சிறப்பாக கீபோர்ட் இசையை நேர்த்தியாக வழங்கினார்.
அங்கு சிறப்புரையாற்றிய உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் தனது வாழ்த்துரையில் ” விசேட தேவைகள் உடைய’ செல்வி ஜனனி அவர்கள் தனது பெற்றோர் மற்றும் ஆசிரியைகள் வழங்கிய உற்சாகத்தாலும் உவகையினாலும் இசைத்துறையில் பங்கெடுத்துள்ளார்.
அவரது இசை நிகழ்ச்சி அதி விசேடமான முறையில் சபையில் உள்ளவர்களை மகிழ்விக்கின்றது என்றார்.
இளம் கலைஞர் ஜனனியின் தந்தையாரும் ஒரு மிருதங்கக் கலைஞர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.