அரச படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு இதுவரை நீதி கிடைக்காத மாணவர்களின் நினைவாக திருகோணமலையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை புனித ஜோசப் மற்றும் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களான மனோகரன் ரஜிஹர், யோகராஜா ஹேமச்சந்திரன், சண்முகராஜா கஜேந்திரன், லோகிதராஜா ரோஹன், தங்கத்துரை சிவானந்தா ஆகியோர் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு அருகிலுள்ள கடற்கரைக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
யோகநாதன் பூங்குழலன் மற்றும் பரராஜசிங்கம் கோகுல்ராஜ் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான போதிலும் உயிர் பிழைத்தனர்.
எனவே ஜனவரி 2025 2ம் திகதி அன்றைய தினம் திருகோணமலை காந்தி சிலையை அண்மித்த சுற்றுவட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களின் உருவப்படங்களுக்கு, பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மலர் மாலை அணிவித்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
பாதுகாப்புப் படையினருக்கும் மாணவர்களின் கொலைக்கும் தொடர்பில்லை என மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முதலில் கூறிய போதிலும், ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் எடுத்த மாணவர்களின் நெருக்கமான புகைப்படங்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததை உறுதிப்படுத்தின.
இரண்டு வாரங்களின் பின்னர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மாணவர்களின் கொலைக்கு எதிராக பெற்றோர் நீதிமன்றத்திற்கு சென்றதால், பல அரச பாதுகாப்பு படையினர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பில் விசாரணைகளை நடத்தினால் பாதுகாப்பு படையினர் தைரியத்தை இழக்க நேரிடும் என மக்கள் விடுதலை முன்னணி, சிங்கள இனவாத குழுக்களுடன் இணைந்து திருகோணமலையில் போராட்டங்களை நடத்தியது. தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதியும் இனியும் இனவாதத்திற்கு இடமளிக்கப்போவது இல்லை என பல தடவைகள் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ‘விரைவாக விசாரணை செய்து முடிக்கக்கூடியவை’ என அரசாங்கம் தெரிவு செய்துள்ள நிலுவையிலுள்ள ஏழு வழக்குகளில் திருகோணமலை ஐந்து மாணவர்களின் படுகொலை வழக்கு உள்ளடக்கப்படவில்லை.
இதனிடையே, விசேட அதிரடிப் படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது அரசாங்கத்திற்கு தெரியும் எனவும் ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களால் வழக்குத் தொடர முடியவில்லை எனவும் அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக்கிடம், அப்போதைய நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
“துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களின் ஆதாரங்களால் அதை நிரூபிக்க முடியாது. ஒருவேளை அவர்கள் மக்களைக் கொல்லும் போது வெவ்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கலாம்” என அவர் கூறியதாக விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியது.
அச்சுறுத்தல்களால், கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோரை அடக்கி ஆள முயன்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பின்னர் வரப்பிரசாதங்களை வழங்கி வாயடைக்க முயன்றது.
“இந்த விவகாரத்தை மேற்கொண்டு யாரும் தொடர்வது நல்லதல்ல, எனவே இந்த முறைப்பாட்டை கைவிடுங்கள், அவ்வாறு செய்தால், கொழும்பில் இருந்து வீடு மற்றும் பாதுகாப்பை வழங்க முடியும்.” என அன்றைய மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் தற்போது அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவருமான மகிந்த சமரசிங்க குறிப்பிட்டதாக வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் சாட்சியமளித்துள்ளார்.
ஆனால் படுகொலை செய்யப்பட்ட மாணவன் மனோகரன் ரஜிஹரின் தந்தை வைத்தியர் காசிபிள்ளை மனோகரன், தனது புதல்வரின் கொலையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு எடுத்துச் சென்று 19 வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை.