ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது அவர்கள் பெரும்பாலும் கடல் மார்க்கமாக படகுகளில் செல்ல முற்படுகின்றனர். இதில் பல பயணங்கள் ஆபத்தில் முடிந்து விடுகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் இவ்வாறு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று துனிசியா, ஐரோப்பாவை அடையும் நோக்கில் 2 படகுகள் கடலில் பயணம் செய்தன. இரண்டு படகுகளில் மொத்தம் 110 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 படகுகளும் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். 83 பேர் மத்திய துனிசியாவில் உள்ள கெர்கென்னா தீவுகளில் மீட்கப்பட்டனர். இடம்பெயர்ந்த மக்கள் வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
