பிரபல அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம், மும்பையில் காலமானார். இவருக்கு வயது 88.
பிரபல அணு விஞ்ஞானியும், 1975ம் ஆண்டு, 1998ம் ஆண்டுகளில் இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு வகித்தவர் ராஜகோபால சிதம்பரம், 88. இவர் 1936ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சென்னையில் பிறந்தார். மாநிலக்கல்லுாரியில் பட்டம் பெற்றார். பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் பி.எச்டி., பட்டம் பெற்ற பிறகு, 1962ல் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார். 1975 மற்றும் 1998ம் ஆண்டுகளில் இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்காற்றினார். அவருக்கு 1975ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்துல் கலாமுக்கு பிறகு, முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவியை பெற்றார். இந்த பதவியில் 17 ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தார். 1999ல் அவருக்கு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. இவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார். சர்வதேச அணுசக்தி முகமையின் சேர்மன் ஆகவும் பணியாற்றியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக, மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிதம்பரம் அதிகாலை 3.20 மணிக்கு காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.