சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலால் மருத்துவமனைகள் நிரம்பி காணப்படுகின்றன. எச்.எம்.பி.வி, இன்ப்ளூயன்சா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 போன்ற பல வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவி வருவதாக அந்நாட்டு செய்திநிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் குளிர்காலம் மற்றும் இலையுதிர் காலத்தில் இந்த சுவாச நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறையினர் கணித்துள்ளனர். சீனாவில், எச்.எம்.பி.வி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் வடக்கு மாகாணங்களில் அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் சுவாச நோய்கள் அதிகரித்து வரும் போதிலும், சீன அரசாங்கமோ அல்லது உலக சுகாதார அமைப்போ அதிகாரபூர்வமாக இன்னும் எந்த எச்சரிக்கையையும் வெளியிடவில்லை. இருப்பினும் சீன அரசு கண்காணிப்பு குழுவை அமைத்து பாதிப்புகளை கண்காணித்து வருகிறது.