ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஏறக்குறைய போரானது 3-ம் ஆண்டை நெருங்கி வருகிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. இந்நிலையில், உக்ரைனில் நேற்று ஒரே நாளில் 103 ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தப்பட்டன என அதன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். கடந்த வாரத்தில், 600-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. இவற்றுடன், வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் என உலகம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.