‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் ‘மகாராஜா’. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. இப்படம் முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் மக்களின் வரவேற்பை பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ‘மகாராஜா’ 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் கடந்த நவம்பர் 29-ந் தேதி வெளியிட்டனர். இப்படம் சுமார் 40,000 திரைகளில் வெளியிட பட்டது. இப்படம் முதல் நாளில் ரூ. 10 கோடி வசூல் செய்தது. தற்போது சீன ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திரைப்படம் சீனாவில் வசூல் சாதனை படைத்த கோலிவுட் படமான இயக்குனர் ஷங்கரின் “எந்திரன் 2.0” படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. சீனாவை தொடர்ந்து ஜப்பானிலும் ‘மகாராஜா’ படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இப்படம் சீனாவில் சுமார் ரூ.91.55 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் முறையாக ரூ.100 கோடி வசூலை நெறுங்கிய முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.