தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுனர் ஆர்.என். ரவி 3 நிமிடங்களில் அவையில் இருந்து வெளியேறினார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுனர் உரையுடன் இன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் காலை 9 மணியளவில் தொடங்கியது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வருகை தந்தனர். கூட்டத்தொடரை முன்னிட்டு, சபாநாயகர் அப்பாவு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர். இந்நிலையில், ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்காக சட்டசபை கூடியது. சட்டசபைக்கு வருகை தந்த ஆளுனர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து, சால்வை போர்த்தி வரவேற்றார். எனினும், தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுனர் ஆர்.என். ரவி 3 நிமிடங்களில் அவையில் இருந்து வெளியேறினார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுனர் அவையில் இருந்து பாதியில் வெளியேறுவது என்பது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழக சட்டசபையில் ஆளுனர் தொடர்பான சர்ச்சைகள் கடந்த காலங்களிலும் எழுந்துள்ளன. 2023-ம் ஆண்டில், தமிழக அரசின் அறிக்கையில் இருந்த பெரியார், அண்ணா ஆகியோரின் பெயர்களை ஆளுனர் படிக்காமல் தவிர்த்து விட்டார். இதன்பின்னர், 2024-ம் ஆண்டில் ஆளுனர் ரவி, உரையை முழுமையாக படிக்காமல் சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், தேசிய கீதம் பாடவில்லை என கூறி அவையில் இருந்து ஆளுனர் ரவி வெளியேறி உள்ளார். இதுபற்றி ஆளுனர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பெயர்கள் டேக் செய்யப்பட்டு உள்ளன. முதலில் வெளியிட்ட பதிவு நீக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை டேக் செய்து ஆளுனர் மாளிகை சார்பில் மீண்டும் பதிவு வெளியிடப்பட்டது.