தென்காசியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் அன்றாடம் சேரும் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவின் மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு இருந்தன. இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கேரள மருத்துவக் கழிவுகளை அம்மாநில அரசே அள்ளி செல்ல வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டது. அதன்படி கேரள அரசும் அதனை அள்ளி சென்றது. தொடர்ந்து இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடந்த விசாரணையில் கழிவுகளை கொட்டிய மருத்துவமனை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
மேலும் கேரள உயர் நீதிமன்றமும் பினராயி விஜயன் அரசு தோல்வி அடைந்து விட்டதாக கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையே இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சி என்கின்ற பகுதியில் மருத்துவக் கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தற்போது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த மருத்துவக் கழிவுகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன? இந்த பகுதியில் மருத்துவக் கழிவுகளை கொட்டி சென்ற நபர்கள் யார்? இது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்ட கழிவுகளா? அல்லது இங்கு உள்ள கழிவுகளா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.