ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் முடக்கப்பட்ட நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆரூத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்கும்படி, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து இது தொடர்பாக ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, ஆர்.கே.சுரேசுக்கு சொந்தமான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ், சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். விசாரணையின் போது ஆர்.கே.சுரேஷ் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, ஆரூத்ரா மோசடி விவகாரத்திற்கும், மனுதாரருக்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்தார். மேலும், வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்திற்குள்ளவதாகவும் கூறினார். வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்வதற்கு பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம், ஏழு வங்கி கணக்குகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் என ஏழு லட்சம் ரூபாயை இரண்டு வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆர்.கே.சுரேஷ்க்கு சொந்தமான முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்க உத்தரவிட்டது.