‘ஈரோடு இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்திருப்பதில் மறைமுக செயல்திட்டம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது’ என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அ.தி.மு.க., புறக்கணிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அ.தி.மு.க., ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட வேண்டும். வெற்றி, தோல்வியை பற்றி கருத்தில் கொள்ள கூடாது. தேர்தலை சந்திக்க வேண்டும். தமிழகத்தை ஆண்ட கட்சி, வலுவான எதிர்க்கட்சி இடைத்தேர்தலை தவிர்ப்பது சரியான நிலைப்பாடு அல்ல. மறைமுகமாக பா.ஜ.வின் அரசியல் நிலைப்பாட்டுக்கு சாதகமாக அமையும். அ.தி.மு.க., புறக்கணித்திருப்பதில் மறைமுக செயல்திட்டம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தேர்தலை புறக்கணிப்பது அவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம். அ.தி.மு.க. போட்டியிடாமல் இருப்பது அதன் சரிவுக்கான புள்ளியாக அமையும். மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது. பெண்களுக்கு எதிராக குற்றங்களை தடுக்க, சட்ட திருத்தம் கொண்டு வந்ததை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.