விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது. இந்த ஆண்டு விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழவர் விருதோடு இரண்டு இலட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அவர்கள் பேசும் போது, “இந்த நிகழ்வுக்காக ஆண்டு முழுக்க காத்திருக்கிறோம். நமக்கு நிறைய வெளிச்சம் கிடைக்கிறது. அந்த வெளிச்சத்தின் மூலம் தங்களின் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களை, குறிப்பாக உழவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மக்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், இவர்கள்தான் நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் அதற்காகதான் உழவர் விருதை தொடர்ந்து நடத்தி வருகிறோம். “இவ்வாறு செய்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும். இவர்கள் அங்கீகாரம் பெறுவதின் மூலம், மேலும் பலர் இவர்களை போல் மாற வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் பல உழவர்கள் பயனடைவார்கள் என நம்புகிறேன்” என்றார்.