சண்டக்கோழிக்குப் பிறகு தனக்கு மிகவும் பிடித்த படம் மதகஜராஜா என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு உருவான படம் மதகஜராஜா. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனு சூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆன்டணி இசையமைத்துள்ளார். கிட்டதட்ட 12 வருடங்களுக்கு பின் இன்று இப்படம் வெளியாகி உள்ளது. அண்மையில் இப்படத்தின் புரமோஷன் விழா நடைபெற்றது. இதில் சுந்தர்.சி, விஜய் ஆண்டனி, விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் விஷால் பேசும்போது, அவரால் சரியாக மைக் பிடிக்க முடியாத அளவிற்கு கை நடுங்கிக்கொண்டே இருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விஷாலுக்கு என்ன ஆனது என சமூக வலைத்தளங்கள் முழுவதும் கேள்விகளால் நிறைந்தது. இந்நிலையில் இன்று (ஜனவரி 12) காலை ரசிகர்களுடன் திரையரங்கில் படத்தைப் பார்த்த விஷால் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பல ஆண்டுகளுக்கு பிறகு ‘மதகஜராஜா’ படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பொதுவாக என்னுடைய படம் ரிலீஸ் ஆகும்போது திரையரங்கிற்கு வந்தால் ஒரு 10, 15 நிமிடங்கள் மட்டும் பார்த்துவிட்டு சென்றுவிடுவேன். ஆனால் ‘மதகஜராஜா’ படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து முழுமையாகப் பார்த்தேன். அவர்களின் கைத்தட்டல், விசில், சிரிப்பு எல்லாவற்றையும் பார்க்கும்போது ஒரு நடிகனாக மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனக்கும் சுந்தர் சாருக்கும் இது ஒரு ஸ்பெஷல் ஆன படம். ‘சண்டக்கோழி’க்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த படம் இது. உழைப்பு என்பது எல்லா படத்திற்கும் கொடுப்போம். ஆனால் இந்தப் படைத்தைப் பொறுத்தவரை படத்திற்கு உழைத்ததை விட வெளியீடுக்கு உழைத்ததுதான் அதிகம். கடைசியில் இந்தப் படம் வெளியாகி விட்டது. ஏன் இந்தப் படம் இவ்வளவு நாளாக வெளியாகவில்லை என்று நாங்கள் ஆதங்கப்பட்டிருக்கிறோம். கடவுள்தான் இந்த தேதியில் படத்தை வெளியாக வைத்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படத்தை எல்லோரும் பாருங்கள்” எனப் பேசினார்.