கனடா உதயன் கதிரோட்டம் – 03-01-2025
இந்தியாவின் முன்னணி இடதுசாரி கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இலங்கையில் தமிழர்கள் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தியா முழுவதும் ஆதரவாளர்கள் நிரம்பியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு கடந்த வார இறுதியில் (ஜனவரி 3-5) தமிழகத்தின், விழுப்புரத்தில் நடைபெற்றது.
மாநாட்டின் ஆறாவது தீர்மானமாக இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களின் அவல நிலை பற்றி பேசுகிறது மேலும் அவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டுமென இலங்கை அரசை கோருகிறது.
இதே இந்திய கம்யுனிஸ்ட் கட்சிதான் அநுர குமார அவர்கள் உலகமே ஆச்சரியப்படும் வகையில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேளை, தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது. மேற்படி வாழ்த்துச் செய்தியில் ‘இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு இடதுசாரி வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு வரலாற்று நிகழ்வு’ என அந்தக் கட்சி வாழ்த்தியிருந்தது. இந்தச் செய்தி இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டிருந்த இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றால் அது மிகையானது அல்ல.
இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள் அநுர குமாரவை இந்தியாவிற்கு அழைத்து அரச கௌரவத்தை வழங்கித் தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டி வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு சிரித்த முகத்தோடு வழி அனுப்பி வைத்தார். ஜனாதிபதி அநுர குமாரவை அவர் இலங்கையின் ஜனாதிபதி என்ற ஒரே காரணத்திற்காகவே கௌரவித்தார் பிரதமர் மோடி அவர்கள். ஒரு சாதாரண ஒரு இளம் அரசியல்வாதி மக்கள் மனங்களை வென்று இவ்வாறு ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்வது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தும் மதித்தும் தான் மோடி அவர்கள் அநுரவை வாழ்த்தி அனுப்பி வைத்தார் ஆனால் அவர் இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவர் என்பது இந்தியப் பிரதமர் அவர்களுக்கு அக்கறையில்லாத விடயம் ஒன்று.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவாக தங்கள் நாட்டு பாராளுமன்றத்தை இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவர்கள் அலங்கரிக்கின்றார்கள் என்றும் ஜனாதிபதியின் ஆசனத்தில் அவ்வாறான க ருத்துக்களில் நம்பிக்கை கொண்ட ஒரு இளம் அரசியல் தலைவர் வீற்றிருக்கின்றார் என்றும் தென்னிலங்கை மக்களில் பெரும்பாலானவர்கள் உற்சாகத்தோடு நாட்கள் நகர்ந்து செல்வதைக் கவனிக்கின்றார்கள். இதே போன்ற கணிசமான ஆதரவு வடக்கு கிழக்கு மற்றும் இஸ்லாமிய மக்கள் மத்தியிலும் உள்ளது என்பதும் நிசர்சனமாகத் தெரியும் காட்சியாகும்
இதேவேளை, எமது தமிழர்பகுதிகளில் மூத்த அரசியல்வாதிகள் தவிர்ந்த ‘பின்னால்’ வந்தவர்களில் பலர் அநுர குமாரவின் தலைமையில் வடக்கிலும் கிழக்கிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சில தமிழர்களின் பிரதிநிதிகளாக காட்சியளிப்பதை விரும்பாதவர்களாக விமர்சனங்கள் அள்ளி எறிகின்றார்கள். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சுமந்திரன் அவர்கள் மாத்திரம் ஒரு தடவை அநுரவை பாராட்டுவகையில் விமர்சனம் ஒன்றை வழங்கியிருந்தார்.
“அநுரவிடம் எனக்கு பிடித்தது எதுவென்றால் அவர் இனவாதத்தை தன் கையில் எடுக்கவும் இல்லை. தனது கட்சியினர் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர்” என்று சுமந்திரன் அவர்களின் அந்த விமர்சனம் அமைந்திருந்தது.
வடக்கில் இடதுசாரி சித்தாங்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்பெற்று அதை பின்பற்றியும் கட்சிகளில் இணைந்தும் செயற்பட்டார்கள். இலங்கையில் இடதுசாரிச் சிந்தனைகளை தங்கள் கைகளில் எடுத்து சில கட்சிகள் தங்கள் அரசியல் தளங்களில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இலங்கைக் கொம்யுனிஸ்ட் கட்சி (மொஸ்கோ அணி) இலங்கைக் கொம்யுனிஸ்ட் கட்சி (பீக்கிங் அணி) இலங்கை சம சமாஜக் கட்சி ஆகியவை இந்தக் கட்சிகளில் முக்கியமானவை. இந்தக் கட்சிகளுக்கு இலங்கையில் நீண்ட கால வரலாறும் அரசியல் பாதைகளும் இருந்தன. தென்னிலங்கையைப் போன்று வடக்கிலும் கிழக்கிலும் கணிசமான அங்கத்தவர்கள் இந்தக் கட்சிகளில் இணைந்து அரசியல் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அங்கீகாரத்தை அவர்களால் பெற்றுவிட முடியவில்லை. காரணம் தென்னிலங்கையில் முதலாளித்துவ கட்சிகளில் தொங்கிக் கொண்டிருந்தவர்களும் அவர்களின் தலைவர்களும் இடதுசாரிக் கட்சியில் வடக்கிலும் கிழக்கிலும் கால ஊன்றி விடக்கூடாது என்பதற்காக விசமத்தனமாக பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள்.
இடதுசாரி சிந்தனைகளைப் பின்பற்றுபவர்களாக மக்கள் மாறிவிட்டால் இலங்கையில் இனவாதம் என்பது அற்றுப் போய்விடும். தமிழ் சிங்கள மக்கள் அந்த சித்தாத்தங்களின் பின்னாள் இணைந்து ஒன்றுமையாக வாழ்ந்தால் தென்னிலங்கையில் இனவாதத்தை பாவித்து அரசியல் செய்யும் தந்திரம் வேலை செய்யாது என்பதற்காக தென்னிலங்கைக் கட்சிகளின் தலைவர்கள் தமிழ்த் தலைவர்கள் பலரை தங்கள் ‘கைகளுக்குள’; போட்டுக் கொண்டார்கள். இதனால் இடதுசாரிக் கருத்துக்களை வட இலங்கையில் பரப்பி அதனை மக்கள் மத்தியில் வேர் ஊன்ற வைக்க முயன்ற பல தமிழ் பேசும் இடதுசாரித் தலைவர்கள் அரசியலின் முன்வரிகைக்கு வரமுடியாமல் போய்விட்டது. இதைப்போன்றே இஸ்லாமிய அரசியல்வாதிகள் பலர் கொழும்புத் தலைமைகளாக இருந்தபடியால் இனவாத சிங்களத் தலைவர்களுக்கு பின்னால் அணிவகுத்து நின்று தங்கள் மக்களையும் ஏமாற்றி அரசியல் நடத்தினார்கள். இதனால் இஸ்லாமிய மக்கள் மத்தியிலும் இடதுசாரிக் கருத்துக்கள் பரவியமை மந்தநிலையிலேயே இருந்தது.
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்கள் (புளட் சித்தார்த்தன் அவர்களின் தந்தை) ஒரு இடதுசாரித் தலைவராகவே அரசியலில் புகுந்தார். ஆனால் அவரால் தேர்தல்களின் வெற்றியீட்ட முடியவில்லை. அதனால் அவர் தமிழரசுக்கட்சின் தமிழ்த் தேசியக் கொள்கையை ஏற்று அதன்சார்ப்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தளவிற்கு வடக்கில் இடது சாரி சிந்தனைகளை எதிர்ப்பதும் அந்த சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள் எதிரணியினர்.
இவ்வாறான பல முக்கிய தகவல்கள் இந்த இடதுசாரி அரசியலுக்குப் பின்னால் மறைந்து போயின. எவ்வாறு அன்றைய அமிர்தலிங்கம், செல்வநாயகம் காலத்தில் வடக்கில் இடதுசாரி அரசியல்வாதிகள் வளர்வதற்கு வாய்ப்புக்கள் இல்லாமல் போன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது என்பதில் இலங்கையில் இன்று மேற்படி சிந்தாத்தங்களை நேசிக்கின்றவர்கள் எண்ணுகின்றார்கள்.
அநுரகுமாரவும் அவர்களது கட்சியும் வடக்கில் மூன்று ஆசனங்களை தட்டிக் கொண்டார்கள். சரி அந்த மூவருக்கும் சந்தர்ப்பங்களை வழங்கிப் பார்ப்போம் என்ற ஜனநாயக பண்பை நாம் பிரயோகித்தால் தென்னிலங்கையின் தலைமையோடு இணைந்து அவர்கள் தமிழர்களுக்கு நன்மையான விடயங்கள் இடம் பெற வழிசெய்வார்கள் என்ற நம்பிக்கையோடு இருப்பதும் தேர்தலில்; தோற்றுப் போனவர்களின் பிதற்றல்களைக் கேட்டு மீண்டும் மீண்டும் குழப்பமடையாத ஒரு நிலை எம் மண்ணில் தோன்ற வேண்டும் என்பதையே நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்!.
அந்த தோற்றுப் போன தரப்பினர் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் ஒரு மகிந்தாவின் யுகத்தையோ அன்றி கோட்டாபாய யுகத்தையோ அன்றி ரணிலின் யுகத்தையோ கொண்டு வர எண்ணுகின்றார்களா என்பதை அவர்களை எங்கேயாவது வீதிகளில் அல்லது கூட்டங்களின் போது சந்தித்தால் நமது மக்கள் அவர்களின் கேள்விகளை முன்வைக்க வேண்டும்ஃ!