துபாயில் நடந்த 24எச் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “துபாய் 24எச் பந்தயத்தில் 991 பிரிவில் 3வது இடத்தைப் பிடித்து ஜிடி4 பிரிவில் “ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்” விருதை வென்ற திரு. அஜித் குமார் மற்றும் அஜித் குமார் ரேசிங் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.!” “பெரிய உறுதியுடன் சவால்களை சமாளித்து உலக அரங்கில் பாரத கொடியை உயரப் பறக்கவிட்டது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் இன்னும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்! ஜெய்ஹிந்த்,” என குறிப்பிட்டுள்ளார்.