சாகித்திய அகாடமி விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 97-ம் பிறந்த நாளை முன்னிட்டு 3.6.2021 அன்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட கனவு இல்லம் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாடமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விருதாளர்களுக்கு அரசு மூலமாக ரூ.40,00,000 மதிப்பீட்டில் கனவு இல்லம் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டது. அதன்படி, 1994-ம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “விஷக்கன்னி” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆ. செல்வராசு (எ) குறிஞ்சிவேலனுக்கு தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2பி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டு கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “பருவம்” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற ப. பாஸ்கரன் (எ) பாவண்ணனுக்கு தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 3பி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல்” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற சா. மணி (எ) நிர்மாலயாவுக்கு கோயம்புத்தூர், சிங்காநல்லூரில் இரண்டாவது அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் முதல் தளத்தில் 4-ஆம் எண் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு ஒடியாவிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம்” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற பி.க.இராஜேந்திரன் (எ) இந்திரனுக்கு சோழிங்கநல்லூர் 1500 திட்டப்பகுதி – II, எட்டாவது தளத்தில் உள்ள மத்திய வருவாய் பிரிவு – II எண்.1/47 குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “மீட்சி” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கௌரி கிருபானந்தனுக்கு சோழிங்கநல்லூர் 1500 திட்டப்பகுதி, பிளாக் எண்-11, எண் 32 குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “பொறுப்புமிக்க மனிதர்கள்” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற க. பூரணச்சந்திரனுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சென்னை, பெசன்ட்நகர் கோட்டம்/பிரிவு – 2, சோழிங்கநல்லூர் (1500 எம்.எஸ்.பி) இரண்டாவது தளம், பிளாக் எண் 7, அடுக்குமாடி குடியிருப்பில் எண். 11 குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “கசாக்கின் இதிகாசம்” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற தி. மாரிமுத்து (எ) யூமா வாசுகிக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ‘4சி’ குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “திருடன் மணியன்பிள்ளை” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற சா. முகம்மது யூசுப்க்கு (குளச்சல் யூசப்) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சென்னை, பெசன்ட்நகர் சோழிங்கநல்லூர் (1500 எம்.எஸ்.பி) கோட்டம்/பிரிவு – 1, இரண்டாவது தளம், அடுக்குமாடி குடியிருப்பில் எண். 6/10 குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “நிலம் பூத்து மலர்ந்த நாள்” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கே.வி. ஜெயஸ்ரீக்கு ஜெ.ஜெ. நகர் கோட்டம், 92-எச்.ஐ.ஜி. அம்பத்தூர் கட்டடத்தின் எச்.4/90 என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “கருங்குன்றம்” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கண்ணையன் தட்சணமூர்த்திக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ‘4ஏ’ குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.